கோபன்ஹேகன் புவிவெப்ப மாற்ற பேரணியில் அமளி - 1000 பேர் கைது
கோபன்ஹேகன்: புவிவெப்ப மாற்றத்தைத் தடுக்க ஐ.நா. உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கோபன்ஹேகனில் நடந்த பிரமாண்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து 1000 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இன்று நடந்த இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாடு நடந்த அரங்கத்தை நோக்கி பேரணியில் கலந்து கொண்டவர்கள் வந்தனர். புவிவெப்ப மாற்றத்தைத் தடுக்க கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கக் கோரி இந்த பேரணி நடந்தது.
இதேபோன்ற பேரணிகள் உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்றன.
கோபன்ஹேகன் பேரணியின்போது திடீரென வன்முறை வெடித்தது. பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியில் திடீரென போலீஸாரை நோக்கி செங்கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். மேலும், கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களையும் தாக்கத் தொடங்கினர்.
இதையடுத்து கலவரத் தடுப்புப் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்தனர். மேலும் வன்முறையில் இறங்கியோரை மேலும் நகர விடாமல் அப்படியே சாலையிலேயே தடுத்து உட்கார வைத்தனர். பின்னர் அவர்களின் கைகளை பின்னுக்குக் கட்டி கைது செய்து பஸ்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பிளாக் பிளாக்ஸ் எனப்படும் ஐரோப்பி அமைப்பைச் சேர்ந்த 400 பேர் உள்பட மொத்தம் 1000 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டர்களில் 150 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் கோபன்ஹேகனில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications