83ல் கொடுத்த அதே முடிவை இப்போதும் தாருங்கள் - திருச்செந்தூர் வாக்காளர்களுக்கு ஜெ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: 1983ல் நடந்த திருச்செந்தூர் இடைத் தேர்தலி்ல் கொள்கை பரப்புச் செயலாளராக நான் பிரசாரம் செய்தபோது கொடுத்த அமோக வெற்றியை இந்த முறையும் திருச்செந்தூர் தொகுதி வாக்காளர்கள் அதிமுகவுக்குத் தர வேண்டும். துரோகம் செய்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தக்க பாடம் கற்றுத் தர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்செந்தூர் இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று ஜெயலலிதா தொடங்கினார்.

தாரங்கதரா விருந்தினர் மாளிகையிலிருந்து வேனில் புறப்பட்டு 4-30 மணிக்கு புன்னக்காயல் வந்தடைந்தார். அங்கு முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வழிநெடுக ரோட்டின் இருபுறமும் கொடிகள், தோரணம் கட்டி இருந்தனர். கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

திருச்செந்தூர் இடைத்தேர்தல் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது 1983-ம் ஆண்டு தான். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். எனது திறமையை சோதிப்பதற்காக அப்போது நடந்த திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டேன். நான் சந்தித்த முதல் இடைத்தேர்தல் திருச்செந்தூர் இடைத்தேர்தல் தான்.

அந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. எனக்கு முதல் அரசியல் பரிசாக வெற்றியை தந்தீர்கள்.

அதுபோல் இந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்ற வெற்றியை இந்த முறையும் திருச்செந்தூர் வாக்காளர்கள் தர வேண்டும்.

துரோகத்திற்கு பாடம் புகட்டுங்கள்

யாருக்குமே அறிமுகம் இல்லாத ஒருவரை கடந்த 2001ம் ஆண்டு அடையாளம் காட்டி வெற்றி பெற வைத்து அமைச்சராக, மாவட்ட செயலாளராக ஆக்கினேன்.

ஆனால் வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல் தூக்கி எறிந்து வி்ட்டு, இயக்கத்தை உதறிவிட்டு 2011ல் வரவேண்டிய தேர்தலை முன்கூட்டியே வரவைத்து விட்டார்.

இந்த துரோகத்தால் தேவையில்லாத இடைத் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

மீனவர்களை நசுக்க மத்திய அரசு ஒரு சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறது. மீனவர்கள் நலனுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த சட்ட முன்வடிவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யும்போது அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்.

எப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்தாலும் அ.தி.மு.க. எதிர்க்கும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

திருச்செந்தூர் தொகுதி, நாடார் இன மக்கள் அதிகம் உள்ள பகுதி. 1983-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதி தேர்தலில் நான் பிரசாரத்துக்காக வந்தேன். அப்போது கிறிஸ்தவ நாடார்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதனை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர் கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார்.

அதேபோல் இந்த தொகுதி இஸ்லாமிய பெருமக்கள் நிறைந்த பகுதி. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு கிடைக்க வித்திட்டது அ.தி.மு.க. தான்.

எனது ஆட்சியில் அனைத்து சமுதாய மக்களையும் சமமாக நடத்தினேன். மத சார்பற்ற கொள்கையை பின்பற்றினேன். நான் என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்.

விலைவாசி விஷம்போல் ஏறி வருகிறது. மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம், உற்பத்தி இழப்பு, சட்டம்-ஒழுங்கு போன்ற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். உங்களிடம் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். அது உங்களின் வரிப்பணம்.

தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கினேன். ஆளுங்கட்சியாக இருக்கும்போது கோரிக்கைகளை நிறைவேற்றினேன். எதிர்கட்சியாக இருக்கும்போது மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினேன். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள். இந்த இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டதாக அமையட்டும். அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் டி.நாராயணன் உங்களுடன் இருப்பார். உங்கள் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவார்.

தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்பட வேண்டும். ஆகவே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் டி.நாராயணனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.

பின்னர் அங்கிருந்து வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், நல்லூர், குரும்பூர், அம்மன்புரம், சோனகன்விளை, வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி ஆகிய இடங்களிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

இன்று திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+