நாடாளுமன்றத் தாக்குதல்: வீரமரணம் அடைந்தோருக்கு தலைவர்கள் அஞ்சலி
டெல்லி: கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வீர மரணமடைந்தவர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில்தான் நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஐந்து தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கி சண்டை நடத்தி ஐந்து தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர்.
இந்த சண்டையில் தீவிரவாதிகளை தவிர்த்து, ஐந்து டெல்லி போலீசார், ஒரு பெண் கான்ஸ்டபிள், ராஜ்யசபா செயலாளர்கள் இருவர் மற்றும் தோட்டக்காரர் ஒருவர் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த அடுத்த ஆண்டில் இந்த சதிதிட்டத்தி்ல் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று நாடாளுமன்றத்தி்ல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
லோக்சபா சபாநாயகர் மீராக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications