தெலுங்கானா - சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக 225 எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

Rosaiah
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திராவில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், எம்.பிக்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளதாலும், அங்கு தொடர்ந்து வன்முறையும், கலவரமும் தலைவிரித்தாடுவதாலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் சட்டசபையில் தெலுங்கானா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக 225 எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.

20 அமைச்சர்கள் ராஜினாமா...

முன்பு தெலுங்கானா பிராந்தியம் மட்டும் செயலிழந்து கிடந்தது. ஆனால் தற்போது கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் கலவரம் வெடித்திருப்பதால் ஒட்டுமொத்த ஆந்திராவும் செயலிழந்துள்ளது.

தற்போது 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதால், அதிர்ந்து போயுள்ள முதல்வர் ரோசய்யா, தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஆநதிராவில் பெரும் அரசியல் அமளி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ரோசய்யா ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படும் தகவலை டெல்லி வட்டாரம் மறுத்துள்ளது. அதேசமயம், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகளை டெல்லி வட்டாரத் தகவல்கள் மறுக்கவில்லை.

ரோசய்யாவும் விலகலாம்...

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரோசய்யா தொடர்ந்து கட்சி மேலிடத்துடன் தொடர்பு வைத்துள்ளார். ஆனால் அமைச்சர்கள் பெருமளவில் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதால் அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது என்றனர்.

தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலியில் விசிட் அடித்து வருவதால் அவரிடமிருந்து ரோசய்யாவுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லையாம். அவர் டெல்லி திரும்பிய பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரோசய்யா முடிவெடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை ரோசய்யா ராஜினாமா செய்ய முன் வந்தால் ஆந்திராவில் கண்டிப்பாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்படும்...

அதேசமயம் சட்டசபையைக் கலைக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

இதற்கு வசதியாக நாளை சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் ரோசய்யாவின் ராஜினாமா அறிவிப்பும், தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகக் கூடும்.

சட்டசபையை இப்போது கலைத்தால் மறுபடியும் தேர்தலை சந்திக்க நேரிடும். அது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அடியைக் கொடுக்கும் என்பதால், தேர்தலை காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால்தான் சட்டசபையை முடக்கி வைக்கு அது தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

தற்போது ரோசய்யா தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 20 பேர் ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 13 பேர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்.

தெலுங்கானா பகுதியைச் சேராத 20 அமைச்சர்களும் நேற்று தாஜ் டெக்கான் ஹோட்டலில் கூடி ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராமநாராயண ரெட்டி கூறுகையில், தெலுங்கானா மாநிலம் குறித்து பாதிக்கப்பட்டவர்களுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆலோசனை நடத்தாமல் தனித்து முடிவெடுத்து விட்டது. இதைக் கண்டித்து நாங்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளோம்.

எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி விட்டது என்றார்.

பின்னர் அமைச்சர்கள் தர்மன பிரசாத ராவ், வெங்கட் ரெட்டி, ஷில்பா மோகன் ரெட்டி ஆகியோர் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் ரோசய்யாவைப் பார்த்து தங்களு முடிவைக் கூறினர்.

அவர்களை அமைதிப்படுத்த முயன்ற ரோசய்யா, கட்சித் தலைமையுடன் பேசுவதாகவும், அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், நிலைமை மேம்படாவிட்டால் தானே ராஜினாமா செய்யப் போவதாகவும் ரோசய்யா தெரிவித்தாராம்.

இதையடுத்து தற்போதைக்கு அவர்கள் தங்களது முடிவை நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் இன்று மாலைக்குள் 20 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் முறைப்படி ஒப்படைக்கவுள்ளனர்.

225 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு...

இந்த நிலையில், தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து 225 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள் என விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் எச்சரித்துள்ளார். மேலும், இவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரியின் கணவர்தான் ராஜகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ஒருங்கிணைந்த ஆந்திராவைக் காக்கும் போராட்டத்தில் தீவிரமாக குதித்துள்ளேன்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அப்படி செய்தால் நிச்சயம் நாங்கள் அதை எதிர்ப்போம் என்றார் ராஜகோபால்.

4 தெலுங்கு தேச தலைவர்கள் உண்ணாவிரதம்..

இந்தச் சூழ்நிலையில், நான்கு தெலுங்கு தேச தலைவர்கள் தெலுங்கானா மாநிலம் அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மயிலாவரம் எம்.எல்.ஏ தேவினேனி உமாமகேஷ்வர ராவ், நுழிவிடு சின்னம் ராம்கோட்டையா, விஜயவாடாமேயர் பஞ்சமூர்த்தி அனுராதா, கட்சித் தலைவர் உமா மகேஸ்வர ராவ் ஆகியோர் விஜயவாடாவில் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.


தொடர்ந்து பதட்டம்...

இதற்கிடையே, தனி தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி, ஆந்திரப் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

தெலுங்கானாவின் சில பகுதிகள் தவிர்த்து மாநிலம் முழுக்க வன்முறை வெடித்துள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவை இரண்டாக பிரிப்பதை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 59 பேர், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 42 பேர், சிரஞ்சீவி கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

நேற்று ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் முழுக்க முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.

காளகஸ்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 12 அரசு பஸ்களை அடித்து உடைத்தனர்.

கடப்பா மாவட்டத்தில் பஸ்-ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. எர்ரகுண்டா பஸ் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டன.

இதே போல் ராயலசீமா- கடலோர ஆந்திரா பகுதிகளில் 110 பஸ்கள், மற்றும் பல லாரிகள் அடித்து உடைக்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் பதட்டமாக இருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் கலவரத்தை அடக்க முடியவில்லை.

முழு அடைப்பையொட்டி நேற்று முழுக்க ஆட்டோ, பஸ், லாரிகள் போன்ற எந்தவித வாகனங்களும் இயக்கப்பட வில்லை. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இன்றும் கிட்டத்தட்ட இதே நிலை தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+