பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்: எங்களுக்கு வாக்களியுங்கள்-ஜெ.

திருச்செந்தூர் இடைத் தேர்தலையொட்டி ஆறுமுகநேரி பெருமாள்புரம், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, உடன்குடி, பரமன்குறிச்சி, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் தெற்குரத வீதி, வ.உ.சி. திடலில் ஆகிய இடங்களில் ஏசி வேனுக்குள் அமர்ந்தபடி ஜெயலலிதா பேசுகையில்,
திருச்செந்தூர் தொகுதி மீனவ மக்கள் நிரம்பியுள்ள தொகுதி என்பதை நான் அறிவேன். மீனவ மக்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
தற்போது மத்திய அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று, மீனவ சமுதாயத்தை நசுக்குகின்ற, கடல் மீன் தொழில் மேலாண்மை சட்ட முன்வடிவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை அதிமுக கடுமையாக எதிர்க்கும்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மட்டுமல்ல, பிற்காலத்திலும் இனி எக்காலத்திலும் மீனவர்களுக்கு எதிரான இந்த சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படக் கூடாது என்பது தான் அதிமுகவின் உறுதியான, தெளிவான நிலைப்பாடு.
மீனவ மக்களுக்கு எதிரான இந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி வருகிற 18ம் தேதி டெல்லி நாடாளுமன்றத்திற்கு முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மீனவ மக்களுக்கு உறுதுணையாக, ஆதரவாக என்றென்றும் நான் இருப்பேன்.
திருச்செந்தூர் தொகுதி நாடார் இன மக்கள் நிறைந்த பகுதி. 1983ம் ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் நான் ஈடுபட்டிருந்தபோது கிறிஸ்தவ நாடார்கள் என்னை சந்தித்து தங்களை எல்லாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.
அந்த கோரிக்கையை உடனடியாக புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் நான் எடுத்துச்சொன்னேன். எம்ஜிஆரும் கிறிஸ்தவ நாடார் மக்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக ஏற்று அவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார்.
இதேபோன்று இந்த தொகுதியில் இஸ்லாமிய பெருமக்களும் நிறைந்து இருக்கிறார்கள். முதன்முதலில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தருவதற்காக "பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம்" அமைக்கப்பட்டது எனது ஆட்சி காலத்தில் தான். இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தனி இட ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்டது அதிமுக தான்.
எல்லா மதத்தினரையும் சமமாக மதித்து நடக்க வேண்டும் என்பது தான் நான் ஏற்றுக்கொண்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கை. சிறுபான்மையினரை பாதுகாக்கும் அரணாக நான் என்றென்னும் இருப்பேன் என்பதை உங்களுக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய திமுக ஆட்சியில் நீங்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறீர்கள். ஒரு பக்கம் விஷம்போல் ஏறும் விலைவாசி. மறுபக்கம் கடுமையான மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தி இழப்பு, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி இந்த ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை.
என்னுடைய ஆட்சி காலத்தில் இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். பல வழிபாட்டுத் தலங்களுக்குத் தேவையான உதவிகள் அதிமுகவால் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆளும் கட்சியாக இருந்தபோது உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறேன்.
எதிர்கட்சியாக இருக்கின்றபோது உங்களுடைய கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி அவை நிறைவேற வழிவகுத்து இருக்கிறேன்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று உறுதி அளிக்கிறேன். பஸ் நிலைய வளாகத்தில் காமராஜர், கக்கன் சிலை அமைக்கப்படும். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் இயக்கமாக அதிமுக விளங்கும்.
அம்மன் டி.நாராயணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து ஒரு திருப்புமுனையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது என்ற செய்தி வந்தவுடன் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் தர ஆரம்பித்துவிட்டனர். ஜனநாயகரீதியில் தேர்தலை சந்தித்து பலத்தை சந்திக்க திமுக தயாரா?.
உங்களுக்கு திமுகவினர் தரும் பணம் உங்களுடையது தான். ஸ்பெக்ட்ரம், மணல் கொள்ளை, அரசி கடத்தல் மூலம் ஊழல்கள் மூலம் அவர்கள் ஈட்டிய பணம். எனவே அது மக்கள் பணம் தான். எனவே பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications