'ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு, இல்லாவிட்டால் கொடநாடு!!'
திருச்செந்தூர்: எம்ஜிஆருக்கு மோரில் ஜானகி அம்மையார் விஷம் கலந்து விட்டார் என்று சொல்லி, எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோதே என்னை முதல்வர் பதவியில் அமர வையுங்கள் என்று கூறிய ஜெயலலிதாதான் உண்மையான துரோகி என்றார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருச்செந்தூர் தொகுதியில் உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் பிரசாரம் செய்த அவர் பேசுகையில்,
உங்களின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. கலைஞரால் ஒப்படைக்கப்பட்ட வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு கேட்டு உங்களை நாடி, தேடி வந்திருக்கிறேன். நான் 5, 6 மாதங்களாக கொடநாட்டில் ஓய்வு எடுத்துவிட்டு, இங்கு வரவில்லை.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் நாங்கள். ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு, இல்லாவிட்டால் கொடநாடு என்ற கொள்கை எங்களுக்கு கிடையாது.
கடந்த முறை நடந்த 5 தொகுதிகளின் இடைத்தேர்தலில் நிற்க பயந்து நடுங்கி, கொடநாட்டில் போய் படுத்துக் கொண்டவர், இந்த தேர்தலில் நிற்பது அதிசயம்தான்.
அனிதா ராதாகிருஷ்ணனை உங்களுக்கு நான் அடையாளம் காட்டத் தேவையில்லை. ஏற்கனவே அவர் உங்களுக்கு தெரிந்தவர்தான். அவர் துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறி வருகிறார்.
ஜெயலலிதாவை, அனிதா ராதாகிருஷ்ணன் மறந்துவிட்டாலும், அவரை ஜெயலலிதா மறக்கவில்லை என்று தெரிகிறது. துரோகத்துக்கான காரணங்களை ஜெயலலிதா கூறுகிறார்.
அனிதா ராதாகிருஷ்ணனை அதிமுகவில் சேர்த்து எம்எல்ஏ.வாக, அமைச்சராக, மாவட்ட செயலாளராக பதவிகளை தந்ததாகவும், ஆனால் அவர் துரோகம் இழைத்து விட்டு சென்றதாகவும் கூறுகிறார். அவர் பதவிகளை தந்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அந்த பதவிகளுக்கு உரிய மரியாதையை கொடுத்தாரா? என்றால், இல்லை.
பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கு அவர் அழைக்கப்படவில்லை. அம்மையாரை அழைத்து திருமணம் நடத்துவதற்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது கூட, அவரை பார்க்கவில்லை.
அதிமுகவில் இருந்து அவரா விலகினார்? கட்சியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, துரோகம் செய்துவிட்டு போய்விட்டார் என்று ஜெயலலிதா கூறுவதில் என்ன நியாயம்?
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தன்மானத்தையும், சுயமரியாதையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கலைஞரை நாடி வந்தார். திமுகவில் இணைந்து பணியாற்ற அனுமதி கேட்டார். எம்எல்ஏ பதவியை துறப்பதற்கும் தயார் என்று கலைஞரிடம் கூறினார்.
அதற்கு அவர் ஒரு யோசனை தெரிவித்தார். ஒரு கட்சியில் இருந்து தானாக விலகினால்தான் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து வரும், ஆனால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு இருப்பதால் அந்த பதவியில் நீடிக்கலாமே என்று கலைஞர் கூறினார்.
அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பதில் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அதிமுக லேபிளில் வாங்கிய பதவி எதுவும் எனக்கு தேவையில்லை. அவர்களால் கிடைத்த பதவி எதுவும் எனக்கு வேண்டாம். நீங்கள் பதவி தந்தாலும், தராவிட்டாலும் திமுகவில் நான் பணியாற்றுவேன் என்றார்.
இப்போது அனிதா ராதாகிருஷ்ணனை, ஜெயலலிதா துரோகி என்கிறாரே, அவர் செய்த துரோகம் உங்களுக்கு தெரியாததா?.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது, ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. அதில், எம்.ஜி.ஆர். ஒரு செயல்படாத முதல்-அமைச்சராக இருப்பதால், அவரை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு, என்னை அந்த பதவியில் நியமியுங்கள் என்று கேட்டுக்கொண்டவர்தானே, ஜெயலலிதா.
அதேபோல ஜானகி அம்மாள் மோரில் விஷம் வைத்தார் என்றும் கூறியவர்தானே ஜெயலலிதா.
அப்படிப்பட்ட ஒருவ நமது வேட்பாளரைப் பார்த்து துரோகி என்று கூறுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை.
ஏற்கனவே எத்தனையோ தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டி இருக்கிறீர்கள். இப்போதும் அவருக்கு பாடம் புகட்டுவதற்கு திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் நல்ல வாய்ப்பு. இதைப் பயன்படுத்தி அதிமுகவை தோற்கடியுங்கள்.
கலைஞர் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து, இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத திட்டமான பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் திருமண உதவி திட்டம், மகப்பேறுக்காக கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவி திட்டம், மாணவர்களுக்கு சத்துணவில் வாரந்தோறும் 3 முட்டைகள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
எல்லாவற்றுக்கும் சிகரமாக ஏழை மக்களும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறுவதற்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட திட்டங்கள் உங்களுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு திமுக வேட்பாளரை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
ஆத்தூர் பகுதியில் மட்டும் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 19 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அன்போடும், பண்போடும் மட்டும் அல்ல, கலைஞரின் மகன் என்ற முறையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கடல்சார் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மேலாண்மை சட்ட மசோதாவை தாக்கல் செய்ய இருந்தது. இந்த மசோதாவில் மீனவர்களுக்கு எதிரான பல்வேறு ஷரத்துகள் இடம் பெற்று இருந்தன.
இதை அறிந்த முதல்வர் கருணாநிதி, மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று பிரதமர், மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு ஆரம்பத்திலேயே கடிதம் எழுதினார். மேலும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அனுப்பி, இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று சரத்ப வாரிடம் எடுத்துக் கூறினார்.
அவர் கலைஞரின் வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து, இந்த பாராளுமன்ற கூட்டத்தில் அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாது என்று உறுதி அளித்துள்ளார்.
மீனவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், முதலில் குரல் கொடுப்பவர் கலைஞர்தான். அவர் மீனவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக விளங்கி வருகிறார். மீனவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர், கலைஞர்.
ஜெயலலிதா ஆட்சியில் செயல்படாமல் இருந்த மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு திமுக ஆட்சியில் புத்துயிர் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த சங்கங்கள் மூலம் ஏராளமான மீனவர்கள் கடன் பெற்று பயன் அடைந்து உள்ளனர். மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கும் கலைஞர் உதவித்தொகை வழங்கி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, மீனவ மறுவாழ்வு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எண்ணற்ற திட்டங்களை ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக செயல்படுத்தி உள்ளார்.
தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளையும், அறிவிக்காத பல திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications