For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி-சர்வதேச விசாரணை நடத்த ஈழத் தமிழர்கள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டோரன்டோ: வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி. அவர் மீது சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கனடா வாழ் ஈழத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா ராஜபக்சேதான் சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் அமைதிச் செயலக தலைவர் புலித்தேவன், முக்கியத் தலைவர் ரமேஷ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாரபட்சமின்றி சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டதாக பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார்.

இது சர்வதேச அளவில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ராஜபக்சே சொல்லித்தான் கோத்தபயா இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். எனவே அதிபர் ராஜபக்சே மற்றும் கோத்தபயா ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக சர்வதேச அளவிலான விசாரணை நடைபெற வேண்டும் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கனடாவிலேயே மிகப் பெரிய தமிழர் அமைப்பான கனடா தமிழர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாளப் பிள்ளை கூறுகையில், போர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே ஈழத்தில் மிகப் பெரிய அளவிலான போர்க் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை இலங்கை ராணுவம்தான் செய்து வருகிறது என்பது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் இதற்கு என்ன ஆதாரம் என்று சர்வதேச சமுதாயம் எங்களைப் பார்த்துக் கேட்டது. இப்போது அந்த ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவரே ஆதாரத்தை வெளியிட்டு விட்டார்.

இதற்கு மேல் உலகத் தலைவர்களுக்கும்,உலக சமுதாயத்திற்கும் என்ன ஆதாரம் வேண்டும்?. இலங்கை அதிபரையும், அவருடைய கூட்டாளிகளையம், மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றம் இழைத்தனர் என்று கூறி விசாரணை நடத்த இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி. அவரை ஹேக்கில் உள்ள போர்க்குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டும். இலங்கையைப் போல உலகில் எந்த நாடுமே இவ்வளவு மோசமாக ஜெனீவா உடன்படிக்கையை மீறி நடந்து கொண்டதில்லை. சரணடைந்த எதிரியை எந்த நாடுமே இவ்வளவு கோரமாக, துடிக்க துடிக்க கொன்று குவித்ததில்லை.

செர்பிய தலைவர் ஸ்லபோதன் மிலசோவிக் மற்றும் சதாம் ஹூசேன் விஷயத்தில் உலக சமுதாயமும், உலகத் தலைவர்களும் எந்த மாதிரி நடந்து கொண்டார்களோ, அதே போல ராஜபக்சேவையும் நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகள் ஐ.நாவுக்கு கடிதம் எழுதவுள்ளனர். சர்வதேச நீதிமன்றத்திற்கும், உலகத் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பவுள்ளனர். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து உடனடியாக விசாரணை நடத்தக் கோரி இந்தக் கடிதங்கள் எழுதப்படவுள்ளன.

விரைவில் இந்தக் கடிதங்கள் அனுப்பப்படும். இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இந்தக் கடிதங்கள் முக்கியமாக அனுப்பப்படும்.

ராஜபக்சேவும் அவருடைய கூட்டாளிகளும் இழைத்த போர்க் குற்றங்களுக்கு அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்றார் அவர்.

உலகிலேயே ஈழத்திற்கு அடுத்து அதிக அளவிலான இலங்கைத் தமிழர்கள் வசிப்பது கனடாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் டோரன்டோவில்தான் உள்ளனர் என்பதும் முக்கியமானது.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது டோரன்டோவில் தமிழர்கள் நடத்திய மிகப் பிரமாண்டமான பேரணியால் கனடாவே அதிர்ந்தது என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X