காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரஸ் கட்சிக்கு புதிது இல்லை, முதுகில் குத்திவிட்டதாகவும் திமுக கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், கழகத் தலைவர் ஸ்டாலின் சிறப்புரையில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

DMK Congress

இந்த கூட்டத்தில் காங்கிரஸை கண்டித்தும், தவெக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.வாக்களித்த மக்களுக்கு நன்றி

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், கழகத் தலைவர் அவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி

2026 சட்டமன்றத் தேர்தலில், கொள்கை உறுதியோடு மதச்சார்பின்மை சக்திகளை ஒன்றிணைத்து 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை' உருவாக்கி, தேர்தல் களத்தில் நம்மையெல்லாம் வழிநடத்தி, முதன்மை தொண்டராய் ஓய்வில்லாமல் உழைத்து, 73 சட்டமன்றத் தொகுதிகளில் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய நம் கழகத் தலைவர் அவர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்!

2026 தேர்தல் களத்தில், தாய்க் கழகத்துடன் இணைந்து கழகத் தலைவர் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஓய்வில்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.


4. இளைஞர் அணிக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி

2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, நமது நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

5. எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துகள்!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற கழக இளைஞர் அணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கி, வழிநடத்தும், கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றியையும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் அணிச் செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

6. ஜூன் - 3 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் - சிறப்பாகக் கொண்டாடுவோம்!

ஜூன் - 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவை, கருப்பு - சிவப்பு கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, இளைய தலைமுறைக்கும் சென்றுசேரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றுச் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாகப் பகிர்ந்து சிறப்பாக கொண்டாட கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அதன்படி கழக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை மக்களுக்கு பயன்படும் வகையில் எழுச்சியுடன் கொண்டாட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

7. கழகத் தலைவர் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குத் துணை நிற்போம்!

தேர்தல் களத்தில் கழகம் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் - பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய இணையதளம் ஒன்றை துவக்கியதோடு, தொகுதிதோறும் சென்று நேரடியாக அனைவரையும் சந்திக்கவும் ஆய்வுக்குழுவை நியமித்திருக்கிறார் நம் கழகத் தலைவர் அவர்கள். கழகத் தலைவர் அவர்களின் இந்த முன்னெடுப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கழகத் தலைவர் அவர்கள் கழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துவகை மறுசீரமைப்பிற்கும் கழக இளைஞர் அணி துணை நிற்பதோடு, வரும் காலங்களில் கழகத் தலைவர் அவர்கள் இடும் கட்டளைகளை - பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி, கழகப் பணியை மென்மேலும் வீரியத்துடன் மேற்கொள்ள உறுதியேற்கிறோம்.

8. முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம்!

கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கழக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது! நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.

இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.

அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.

தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.

சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது. இவ்வாறு அந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+