தமிழ் ஈழம்-பிரான்ஸ் வாக்கெடுப்பில் 99% ஆதரவு
பிரான்ஸில், தனி ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து ஒரு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.
இதுகுறித்து வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டில், 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தனி ஈழமே ஒரே தீர்வு என்று கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, தனி ஈழம், வேண்டுமா, வேண்டாமா என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் இடம் பெற்றிருந்தன.
இதற்கு ஆதரவாக 99.32 சதவீத வாக்குகள் கிடைத்தன. இவர்களில் 30 ஆயிரத்து 936 பேர் தனி ஈழமே வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இன்னும் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படவில்லை. அந்த ஓட்டுக்களின் எண்ணிக்கை 2000 முதல் 3000 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 பேர் மட்டுமே வேண்டாம் என்று கூறியிருந்தனர். 169 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட, தகுதி வாய்ந்த 31 ஆயிரத்து 148 தமிழர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 25,000 முதல் 35 ஆயிரம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் தமிழர்கள் திரண்டு வந்து, 99 சதவீதம் பேர் தனி ஈழமே வேண்டும் என்று ஆணித்தரமாக வாக்களித்திருப்பது, முள்ளிவாய்க்கால் சம்பவத்தோடு தனி ஈழம் செத்துப் போய் விட்டது என்ற பிரசாரம் பொய்யானது என்பதை நிரூபிப்பதாக உள்ளதாக தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்புக்கு முதலில் தமிழர்களிடையே கூட அதிக ஆர்வம் இல்லை. மேலும் மீடியாக்களும் கூட இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தன. ஆனால் மிகப் பெரிய அளவில் வாக்கெடுப்புக்கு மக்கள் கூடியதை அடுத்து அத்தனை பேரின் கவனத்தையும் இந்த கருத்துக் கணிப்பு கவர்ந்து விட்டது.
தேர்தல் பார்வையாளர்களைக் கொண்டு மிகத் திட்டமிட்ட முறையில் சிறப்பாக, ஒரு தேர்தலைப் போல நடத்தி முடித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். இதில் பார்வையாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட செவ்ரான் நகர மேயர் ஸ்டீபன் கடிங்க்னான் கூறுகையில், ஈழத் தமிழர்களின் அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் எனது ஆதரவு உண்டு என்றார்.
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ள அண்டை நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களும் பெருமளவில் வந்தனர். ஆனால் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஈழத் தமிழர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டின் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர்.













Click it and Unblock the Notifications