76 எம்பிக்கள் எதிர்ப்பு மனு- விடுமுறையில் தினகரன்
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரனுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர ராஜ்யசபா எம்.பிக்கள் 76 மனு அளித்துள்ள நிலையில், தனது ஒரு வாரகால விடுமுறையை மேலும் நீட்டித்துள்ளார் தினகரன்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீது, அரசு புறம்போக்கு நிலத்தை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதாகவும், விதிகளுக்குப் புறம்பாக வீடுகள், நிலங்களை வாங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதனால் அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. ஆனால், 'நான் சுத்தமானவன், கரை படியாத கரத்திற்கு சொந்தமானவன் நான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பதால் என்னால் இதற்கு மேல் பேச முடியாது.
எனக்கு எதிராக செயல்படுவர்களின் முகத்திரையக் கிழிக்க என்னால் முடியாத நிலை உள்ளது. இருப்பினும் சத்தியம் வெல்லும்' என்று கூறியுள்ளா தினகரன்.
எனினும் தலைமை நீதிபதி பதவியில் இருந்து தினகரன் விலக வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.
இந் நிலையில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா கராத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா உட்பட 76 எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று, ராஜ்யசபா சபாநாயகர் ஹமீது அன்சாரியிடம் நேற்று அளிக்கப்பட்டது.
அதில், நீதிபதி தினகரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இதுபோன்ற ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய முடியும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் இடமளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி, எம்.பிக்கள் கொடுத்துள்ள மனு குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கேட்டபோது அந்த மனுவை இன்னும் பார்க்கவேயில்லை என்றார்.
தினகரனுக்கு எதிரான இந்த மனுவில் பாஜக கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ஜனதா தளம், ஐக்கிய அகாலிதளம், அதிமுக ஆகிய கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தில் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
காங்கிரசின் முடிவைப் பொறுத்து எம்.பிக்களின் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே, நீதிபதி தினகரன் நேற்று உயர்நீதிமன்ற பணிகளில் ஈடுபடவி்ல்லை. கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினகரன் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் 14ம் தேதி அவர் நீதிமன்றத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தினகரன் நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர் விடுமுறையை நீட்டித்திருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications