மோசடி பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு புது சிக்கல்!

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்தவர் சுமதி ரவிச்சந்திரன். பெருமளவில் ஊழல் செய்ததாக கைதாகி, ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இவருக்கு ரூ. 50 கோடியளவுக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியருக்கான அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இவர் வீட்டு மனை பெற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வீட்டு வசதி வாரியத்தின் முகப்பேர் ஏரி திட்டத்தில் உள்ள உயர் வருவாய் பிரிவு மனை கடந்த ஆண்டு இவருக்கு ஒதுக்கப்பட்டது. 405 சதுர மீட்டர் பரப்பளவுள்ள அந்த மனைக்கான தொகையாக ரூ. 62.33 லட்சத்தை சுமதி ரவிச்சந்திரன் 5 தவணைகளில் செலுத்தினார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஊழல், முறைகேடு, லஞ்ச வழக்கில் சுமதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து லஞ்சப் புகாரில் கைதான சுமதி ரவிச்சந்திரனுக்கு எந்த அடிப்படையில் 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்' என்று கூறி மனை ஒதுக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்' என்று யாரையும் சான்றளிக்கும் வழக்கம் தங்கள் துறையில் நடைமுறையில் இல்லை என
வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் பிரிவு தலைமையகம் பதில் அளித்தது.
இதன் பின் ரூ. 62.33 லட்சத்தில் மனை வாங்குவதற்கு அவரிடம் இருந்த வருவாய் ஆதாரங்கள் குறித்து 'பேக்ட் இந்தியா' அமைப்பு சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, தனது கணவர் ரவிச்சந்திரனின் பெயரில் கீழ்ப்பாக்கத்தில் இருந்த வீட்டை வங்கியில் அடகு வைத்து பெற்ற பணத்தை முகப்பேரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைக்கான தொகையாக செலுத்தியதாக சுமதி ரவிச்சந்திரன் தரப்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முகப்பேர் கோட்ட செயற் பொறியாளர் வாரிய மேலாண்மை இயக்குநருக்கு கடந்த செப்டம்பரில் கடிதம் அனுப்பினார். தில், சுமதி ரவிச்சந்திரன் அப்பழுக்கற்ற அரசு ஊழியரா என்பது குறித்து இப்போதைய சூழலில் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
மனை ஒதுக்கீட்டிற்காக சுமதி ரவிச்சந்திரன் சமர்பித்த மனுவில், தனது கணவர் பெயரில் வீடு இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரது கணவர் பெயரில் உள்ள வீட்டின் மீது கடன் பெற்றிருப்பது தெரிய வந்துள்ள நிலையில் இது குறித்தும் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நாட்டின் எந்தப் பகுதியிலும் எங்களுக்கு சொந்தமான வீடு, மனை, குடியிருப்பு இல்லை என்று எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளீர்கள், ஆனால், கணவர் பெயரில் உள்ள வீட்டினை அடமானம் வைத்து ரூ. 25 லட்சம் கடன் பெற்ற விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. எனவே, வீட்டுவசதி வாரியத்துக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் அளித்து மனை ஒதுக்கீடு பெற்றது குறித்து உரிய
விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்பதற்கான சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இதனையும் அனுப்பி வைக்க வேண்டும் என வீட்டுவசதி வாரியத்தின் முகப்பேர் கோட்ட செயற்பொறியாளர் எம். ராமகிருஷ்ணன் சுமதி ரவிச்சந்திரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுமதி ரவிச்சந்திரன் ஒரு உதாரணம்தான். இதுபோல மேலும் பல உயர் அதிகாரிகள் மோசடியாக வீட்டு மனை பெற்று அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு ஆப்பு வைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications