For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபன்ஹேகன் மாநாட்டில் திருப்பம்-இந்தியாவின் முக்கிய கோரிக்கை ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

கோபன்ஹேகன்: கோபன்ஹேகன் மாநாட்டின் முக்கியத் திருப்பமாக இந்தியா கோரி வந்த முக்கிய கோரிக்கை வரைவுத் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கோபன்ஹேகன் புவிவெப்ப தடுப்பு மாநாட்டின் தீர்மானமாக முதலில் டென்மார்க் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது. இதற்கு மிகக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக வளரும் நாடுகள் மொத்தமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவை அடங்கிய பேசிக் அமைப்பு மாநாட்டை விட்டே வெளியே போய் விடுவோம் என மிரட்டல் விடுத்தன.

இதனால் அந்த வரைவுத் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டின் முக்கிய நோக்கம் திசை மாறிப் போய் ஏழை, பணக்காரர் என்ற பிரச்சினையாக இது உருவெடுத்தது. இதனால் மாநாட்டில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டு விட்டது.

பேசிக் கூட்டறிக்கை
இந்த நிலையில் நேற்று பேசிக் அமைப்பின் சார்பில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் பணக்கார நாடுகள், பேச்சுவார்த்தையை சீர்குலைக்க முயல்கின்றன என்று கடுமையாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பேச்சுவார்த்தைகள் மிக மெதுவாக போய்க்கொண்டுள்ளன.

இறுதித் தீர்மானத்திற்கு முன்பு நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறும். ஆனால்,சில முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வராவிட்டால் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் அபாயம் உள்ளதை மறுக்க முடியாது.

வளரும் நாடுகளை மனதில் கொண்டு வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் சமரசத்திற்கு உடன்படாவிட்டால், கியோட்டோ பிரகடனத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வளர்ந்த, பணக்கார நாடுகள் முன்வராவிட்டால், நிச்சயம் இது தோல்வியில்தான் முடியும்.

வளர்ந்த நாடுகளின் பிடிவாதப் போக்கு தேவையற்றது, காரணமே இல்லாதது. இது இந்தியாவுக்கு ஏமாற்றம் தருகிறது.

கியோட்டோ பிரகடனத்தை ஒதுக்கக் கூடாது
கியோட்டோ பிரகடனத்தை ஒதுக்கக் கூடாது என்பது வளர்ந்த, பணக்கார நாடுகளுக்கு நாங்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை. கியோட்டோ பிரகடனம்தான் இந்த மாநாட்டின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

வளரும் நாடுகள் தங்களது நாடுகளில் முடிந்த அளவுக்கு புவிவெப்ப தடுப்பு தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் வளர்ந்த, பணக்கார நாடுகள் இதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது அதிருப்தி தருகிறது.

மேலும் வளரும் நாடுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், நிதியுதவிகளையும் அளிக்க அவை தாமதம் செய்கின்றன.

நியாயமான முறையில் வளர்ந்த, பணக்கார நாடுகள் நடந்து கொள்ள முன்வர வேண்டும்.

கோபன்ஹேகன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் அதற்கு பேசிக் அமைப்பு நிச்சயம் காரணம் இல்லை. சாதகமான முடிவு வர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம், முயற்சிக்கிறோம், ஒத்துழைப்பு தருகிறோம்.

ஐ.நா. மாநாட்டு திட்டம், பாலி நடவடிக்கைத் திட்டம் மற்றும் கியோட்டோ பிரகடனம் ஆகிய மூன்றின் அடிப்படையில்தான் கோபன்ஹேகன் மாநாட்டு தீர்மானம் அமைய வேண்டும் என்பதே எங்களது ஒரே கோரிக்கை என்றார்.

மேலும் நேற்றைய பேச்சுவார்த்தைகளின்போது ஆப்பிரிக்க நாடுகளின் தலைமையில் வளரும் நாடுகள் வெளிநடப்பு செய்ததால் மறுபடியும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு ஒரு திருப்பம் ஏற்பட்டது. வன அழிப்பின் விளைவாக வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்துவது, புவிவெப்ப மாற்றத் தடுப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது ஆகிய இரு விவகாரங்களில் இந்தியா வெளியிட்ட கோரிக்கை வரைவுத் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது.

அதேபோல வனங்களைப் பாதுகாப்பது, வனங்களை நிர்வகிக்க மேம்பட்ட முறைகள் உள்ளிட்டவையும் கூட வரைவுத் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா - ஆஸி. கருத்து மோதல்

இதற்கிடையே, பேச்சுவார்த்தைகளின் போக்கு குறித்து இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கடும் கருத்து பேதங்கள் ஏற்பட்டன.

கியோட்டோ பிரகடனத்தை 2012ம் ஆண்டுக்கு அப்பாலும் அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா கூறியதை ஆஸ்திரேலியா கடுமையாக எதிர்த்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் மூண்டன.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வாங்கின் பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆஸ்திரேலியா ஒரே பாதையில் போக முயற்சிக்கிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார சக்திகளை கட்டுப்படுத்தி, சட்ட ரீதியாக புகை மாசுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட வைக்க அது முயலுகிறது. இதை ஏற்க முடியாது என்று கடுமையாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், கூட்டத்தை விட்டு சிறிது நேரம் வெளிநடப்பு செய்தார்.

கொமேனி போல

பின்னர் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், அயத்துல்லா கொமேனி போல நடக்க முயற்சிக்கிறார் வாங். இருப்பினும் அவரை எனது சிறந்த நண்பராகவே நான் கருதுகிறேன் என்றார் ரமேஷ்.
மேலும் தான் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்யவில்லை. நீண்ட நேரம் கூட்டம் நடந்ததால் எனக்கு வேறு வேலை இருந்ததால் வெளியேறியதாக ஜெய்ராம் ரமேஷ் விளக்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X