உயர்ந்து வரும் உணவுப் பொருள் பணவீக்கம் - பிரணாப் கவலை
டெல்லி: உயர்ந்து வரும் உணவுப் பொருள் பணவீக்கத்தால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது பெரும் கவலை தருவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் கூட குறைவதாகத் தெரியவில்லை. நவம்பர் மாதத்திற்கான உணவுப் பொருள் பண வீக்கம் 4.78 சதவீதத்தைத் தொட்டு விட்டது. சந்தை எதிர்பார்ப்பான 4 சதவீத அளவை இது தாண்டியுள்ளதால் உணவுப் பொருட்களின் விலை மேலும் மேலும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
இது பெரும் கவலை தருவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இருப்பினும் இதைத் தடுக்க அரசுத் தரப்பில் உடனடி நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.
கடந்த மாதத்தை விட நவம்பர் மாதத்தில் உணவுப் பொருட்ளுக்கான இன்டக்ஸ் 3.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
பணவீக்கம் காரணமாக உருளைக்கிழங்கு, வெங்காயம், சர்க்கரை பருப்பு வகைகள்தான் மிகப் பெரிய அளவில் விலை உயர்ந்து காணப்படுகின்றன.
கடந்த 9 மாதங்களில் பருப்பு வகைகளின் விலைவாசி 32 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறிகள் மொத்தமாக 65 சதவீத அளவுக்கு விலை உயர்ந்துள்ளன. உருளைக்கிழங்கு விலை 140 சதவீதம் உயர்ந்து இல்லத்தரசிகளின் இதயங்களை நொறுக்கியுள்ளது. சர்க்கரை விலை 37 சதவீதம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications