திமுக ஆட்சியில் 'வறண்டவாசி' ஆன வந்தவாசி-ஜெ
வந்தவாசி: திமுக ஆட்சியில் வந்தவாசி தொகுதி 'வறண்டவாசி' ஆகிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
வந்தவாசி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில்,
பேரூராட்சியாக இருந்த வந்தவாசியை நகராட்சியாக மாற்றியது அதிமுக ஆட்சிதான். இங்கு அரசு மகளிர் கல்லூரி தொடங்க அனுமதி தந்ததும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவிகள் விடுதிக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தந்ததும் அதிமுக ஆட்சி தான்.
ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு பட்டமேற்படிப்பு வரை இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்தியது, இஸ்லாமிய மக்களுக்கு தனி ஒதுக்கீடு கிடைக்க வழிவகுத்தது உள்ளிட்டவற்றை நிறைவேற்றியது அதிமுக அரசுதான்.
2006ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மைனாரிட்டி திமுக அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் வந்தவாசி தொகுதி முன்னேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதியில் வாரத்துக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் சிக்குன்குனியா, காலரா போன்ற நோய்கள் பரவியுள்ளன.
சாலைகள் முற்றிலும் பழுதாகி உள்ளன. வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக
உள்ளன. (ஹெலிகாப்டரில் வந்தவாசிக்கு வர இருந்த ஜெயலலிதா வானிலை மோசமாக இருந்ததால் காரில் வர வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது)
பாலாறு பாலைவனமாக மாறி விட்டது. பாலாறு- பொன்னை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. அதைத் தடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.
வந்தவாசியை திமுகவினர் வறண்டவாசியாக்கிவிட்டனர். கொலை, கொள்ளை, சூதாட்டம் நிறைந்ததாக தமிழகம் மாறி விட்டது.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக. ஆளும்
கட்சியாக இருந்தால் உங்கள் கோரிக்கைகளை உடனே
நிறைவேற்றுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் உங்கள் கோரிக்கைக்காக குரல் தருவோம்.
அதிமுக தேர்தலில் போட்டியிடுவதால் ஜனநாயக ரீதியாக சந்திக்க துணிச்சல் இல்லாமல் பணப்பட்டுவாடா செய்து ஜனநாயகத்தை ஆழக் குழிதோண்டி புதைத்து விட்டனர்.
திமுக அரசை அகற்றும் சக்தி இத்தேர்தல் மூலம் உங்கள் கையில் தரப்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, இடைத் தேர்தல் மூலம் திருப்புமுனை ஏற்படுத்துங்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications