செம்மொழி மாநாடு-கோவையில் திருமணங்களை தவிர்க்க கோரிக்கை
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் சமயத்தில் கோவையில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சரும், மாநாட்டு இட ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
செம்மொழி மாநாடு நடைபெறும் சமயத்தில், கோவையில் உள்ள உள்ள 150 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் மாநகராட்சி திருமண மண்டபங்கள் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமண மண்டபங்கள் கிடைக்காமை, உறவினர் வந்து செல்வதில் ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடாக வேறு தேதிகளை தேர்வு செய்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநாட்டு இட ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குழுவின் துணைத் தலைவர்களான முன்னாள் எம்பி மு.ராமநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, உறுப்பினர்கள் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன், பதிவாளர் பொ.திருமால்வளவன், கோவை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பி்ன்னர் அமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் தமிழறிஞர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள், நிகழ்ச்சிகள் நடத்துவோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தங்கும் இட வசதிகள் செய்துதரப்படும்.
கோவை மாநகரம் மற்றும் நகரையொட்டிய பகுதிகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 2 ஆயிரம் அறைகளும், குளிர்சாதன வசதி இல்லாத ஆயிரம் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர பல்வேறு அரசுத் துறைகளின் விருந்தினர் இல்லங்கள், புதிதாக துவங்கப்பட உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் என ஏறத்தாழ 4 ஆயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் மாநகரப் பகுதியில் உள்ள 150 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் மாநகராட்சி திருமண மண்டபங்கள் மாநாடு நடைபெறும் நாள்களில் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications