ஐக்கிய ஆந்திரா கோரி சிரஞ்சீவி யாத்திரை: கட்சி உடைகிறது
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தால் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி உடையும் நிலைக்கு வந்துள்ளது.
தெலுங்கானாவின் 10 மாவட்ட தலைவர்கள் மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளர். தெலுங்கானா பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதை எதிர்த்து காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜயம் கட்சிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா அறிவிப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த படங்கள் ஓடும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
ஐக்கிய ஆந்திரா கோரி சிரஞ்சீவி யாத்திரை:
இந் நிலையில் ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி யாத்திரை தொடங்க இன்று காலை தனது திருப்பதி தொகுதிக்கு சிரஞ்சீவி வந்தார். அங்குள்ள பொட்டி ஸ்ரீராமுலு சிலைக்கு மாலை அணிவித்த அவர் ஐக்கிய ஆந்திராவுக்கு ஆதரவாக போராடி வரும் வக்கீல்கள், மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.
பின்னர் ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி வேனில் யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரை சந்திரகிரி, ரேணிகுண்டா வழியாக காளஹஸ்தியில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையால் ஆந்திரா முழுவதும் தொடர்ந்து கலவர நிலையிலேயே உள்ளது. தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் இன்றும் 8வது நாளாக முழு அடைப்பு போராட்டம் தொடர்ந்தது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மட்டுமல்லாது நாடாளுமன்றத்திலும் தெலுங்கானா விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளன. தெலுங்கானா அமைவதற்கு வழிசெய்யும் மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவேண்டுமென பாஜகவும் சேர்ந்து வலியுறுத்துகிறது.
'இது ஆந்திராவுக்கும் மட்டுமே உரிய பிரச்சனை அல்ல. மத்திய அரசுக்கும் இது பிரச்னைதான். இதற்கு தீர்வு காண எங்களுக்கு மத்திய அரசு வழிகாட்ட வேண்டும்' ஆந்திர முதல்வர் ரோசய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அரசுக்கும் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கை திரும்ப அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றும் ரோசய்யா வருத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தனி தெலுங்கானாவை ஆதரித்து வந்த பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி, தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்தார்.
தனி தெலுங்கானாவுக்கு எதிராக எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி. இதை த்தொடர்ந்து, தெலுங்கானா பகுதியை சேர்ந்த பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனில், மகேஷ்வர் ஆகிய இருவரும் கட்சியை விட்டு விலகியுள்ளர்.
தங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டனர். மேலும் தெலுங்கானா பகுதியின் 10 மாவட்ட தலைவர்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளர். கட்சி அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்படும். கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பதவி விலகிய இரு எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்துள்ளனர்.
சிரஞ்சீவி அண்ட் கோ Vs விஜயசாந்தி:
சிரஞ்சீவிக்கு ஆதரவாக நடிகர் மோகன் பாபு, என்.டி. ராமராவின் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா ஆகியோரும் குரல் கொடுத்துள்ளனர்.
இதனால், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மகதீரா, சிரஞ்சீவியின் மருமகன் அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான ஆர்யா&2 ஆகிய திரைப்படங்களை திரையிட முடியாதபடி தெலங்கானா ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
சில இடங்களில் தியேட்டர்களுக்குள் புகுந்து சினிமா பட ரீல்களை தீ வைத்து எரித்தனர்.அதேபோல், ஜுனியர் என்டிஆர் நடித்த அதுர்த் பட போஸ்டர், பேனர்களை கிழித்து எறிந்தனர். இந்த படத்தையும் திரையிட விடமாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி.யான நடிகை விஜயசாந்தி நடித்த திரைப்படங்களை விஜயவாடா, விசாகப்பட்டனம் பகுதிகளில் திரையிட விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications