இடைத் தேர்தல்-நெல்லை விடுதிகள் ஹவுஸ்புல்
ஆறுமுகநேரி: இடைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நெல்லையிலுள்ள லாட்ஜூகளில் அறைகள் நிரம்பி வழிகின்றன.
திருச்செந்தூர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை நடக்கிறது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக என மும்முனை போட்டி நிலவுகிறது. இக்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கடந்த 15 தினங்களாக திருச்செந்தூரில் முகாமிட்டிருந்தனர்.
திருச்செந்தூரில் நேற்று மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் தொகுதியில் உள்ள வெளிமாவட்ட ஆட்கள் அனைவரும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் இருந்து வெளியேறிய அனைத்து கட்சி பிரமுகர்களும் நெல்லையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
தேர்தல் முடியும் வரை நிலவரங்களை கண்காணிக்க நெல்லை மாநகரம் வசதியாக இருக்கும் என்பதால் இங்குள்ள லாட்ஜூகளில் ரூம் போட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பலர் 17, 18, 19 ஆகிய 3 தினங்களுக்கு புக் செய்துள்ள நிலையில் தற்போது திருச்செந்தூரில் இருந்து வெளியேறிய பலரும் நெல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நெல்லை சந்திப்பு மதுரை சாலை, வடக்கு பைபாஸ் சாலை, மேம்பாலம் பகுதிகளிலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் அறைகள் நேற்று மாலையில் நிரம்பி வழிந்தன.
புதிதாக ஹோட்டலில் ரூம் கேட்டு செல்பவர்களுக்கு 19ம் தேதி வரை இடம் இல்லை என தெரிவிக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று நெல்லைக்கு வந்த சிலர் சந்திப்பு ஹோட்டல்களில் அறை இல்லாமல் திண்டாடினர்.
ஓ.பி நெல்லையில் முகாம்:
திருசெந்தூரில் விஜபிகள் வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் நெல்லையில் முகாமிட்டுள்ளனர்.
தென்மண்டல ஜஜியாக பொறுப்பேற்றுள்ள ஆபாஷ்குமாரும் நெல்லையில் தங்கியிருந்து தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
திமுக கவுன்சிலர் கார் சேதம்-சுயேச்சை கைது:
திருச்செந்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மக்கள் தேசம் என்ற கட்சியின் ஆசைத்தம்பி என்பவர், திமுக கவுன்சிலர் காரைத் தாக்கி சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருசெந்தூர் தொகுதியில் மக்கள் தேசம் கட்சியின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஆசைதம்பி போட்டியிடுகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் காயல்பட்டிணம் மெயி்ன் பஜார் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அந்த வழியாக மதுரை மாநகராட்சி 50வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான காரை டிரைவர் மூர்த்தி ஓட்டி வந்தார்.
இதை பார்த்த மக்கள் தேசம் கட்சியினர் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆசைதம்பி, நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த வேல்சாமி மகன்கள் முருகன், வரதராஜன், ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications