தெலுங்கானா அறிவிப்பை வாபஸ் பெற்றால் ... ராவ் எச்சரிக்கை
ஹைதராபாத்: ஆந்திரா, ராயலசீமா, போராட்டத்தை காரணம் காட்டி மத்திய அரசு தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை வாபஸ் பெற்றால் கடும் விளைவு ஏற்படும். நான் இன்னும் 4 நாட்கள் மட்டுமே அமைதியாக இருப்பேன். அதன் பிறகு பாயும் புலியாக மாறுவேன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரி தெலுங்கானா தவிர்த்த பிற பகுதிகளில் பெரும் போராட்டம் வெடித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.
இதனால் அது தெலுங்கானாவை கைகழுவலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கேற்ப, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை என்று கூறி விட்டது மத்திய அரசு. ஆனால் ஆந்திர மாநில சட்டசபை தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ளார் சந்திரசேகர ராவ். இதுகுறித்து ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடலோர ஆந்திரா- ராயல சீமாவில் தெலுங்கானாவுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். சில சுயநல அரசியல் தலைவர்கள் தான் இப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இப்போராட்டத்தை காரணம் காட்டி மத்திய அரசு தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை வாபஸ் பெற்றால் கடும் விளைவு ஏற்படும்.
தெலுங்கானா போர் பூமியாக மாறும். நான் இன்னும் 4 நாட்கள் மட்டுமே அமைதியாக இருப்பேன். அதன் பிறகு பாயும் புலியாக மாறுவேன் என்பதை மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரவு அளிப்பதாக பிரஜா ராஜ்யம், தெலுங்கு தேசம் கட்சிகள் கூறியிருந்தன.
ஆனால், இப்போது அவை பச்சோந்தி போல் மாறி விட்டன. பச்சோந்தியே வெட்கப்படும் அளவுக்கு சிரஞ்சீவி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, மாநிலம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாடகம் ஆடுகிறார். அவர் ஒரு சுயநலவாதி. அவருக்கு அரசியல் தெரியாது.
மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்துவார்கள். ஆனால், இங்கு ஒற்றுமை நாடகம் ஆடுகிறார்கள். தெலங்கானா மாநிலம் ஏற்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.
சோனியா மீண்டும் ஆலோசனை:
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் தனது இல்லத்தில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இதில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications