சேது: இந்துத்துவா சக்திகளுக்கு அரசு பணிந்து விட்டதா?-வீரமணி

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஒன்றரை நூற்றாண்டு காலமாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படப் போகிறது என்ற நம்பிக்கை அண்மை காலம் வரை இருந்து வந்தது. இப்போது மத்திய அரசு நடந்து கொள்ளும் போக்கை பார்த்தால் திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுகிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
தேசிய கடல் ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையை வல்லுனர்கள் குழு நவம்பர் 10ம் தேதி பரிசீலித்தது. சுற்றுச்சூழல் பற்றி மேற்கொண்டு 18 மாதங்களில் ஆய்வு நடத்துவதற்காக இன்னொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தருணத்தில் தேசிய கடல் ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையை இறுதியானதாக எடுத்து கொள்ளக்கூடாது. நிபுணர் குழுவையும் இது கட்டுப்படுத்தாது என்று அபிடவிட்டில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட நீரி வல்லுனர் குழு அறிக்கையின் அடிப்படையில் சேது கால்வாய் திட்ட பணிகள் பெருமளவு முடிவுற்ற நிலையில் அந்த நிபுணர் குழுவின் அறிக்கையை குப்பையில் தூக்கி போட்டு விட்டு இன்னொரு குழுவை அமைக்க போகிறோம் என்பது காலம் கடத்தி இத்திட்டத்தை நிறைவேற்றாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் தந்திரம் என்றே கருதுகிறோம்.
பழைய நிபுணர் குழு அறிக்கையை மத்திய அரசு ஏன் ஏற்கவில்லை? இந்துத்துவா சக்திகளின் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசு பணிந்து விட்டதா?.
மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு இப்படி ஒரு அறிவிப்பு மத்திய அரசின் சார்பில் வெளி வருவது கண்டிக்கதக்கதாகும். இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அலட்சியபடுத்தும் செயலாகும்.
தமிழக அரசு இந்த திட்டத்தை காலம் கடத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஒரு மாதத்தில் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் இதில் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஆலோசித்து திராவிடர் கழகம் அறப் போராட்டம் நடத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications