திருப்புமுனையை ஏற்படுத்த சிந்தாமல், சிதறாமல் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் - ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் திருப்புமுனையை திருச்செந்தூர், வந்தவாசி தேர்தல் களம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக உங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அதிமுகவுக்கு அளியுங்கள் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம்போல் ஏறிக்கொண்டே செல்கின்றன. ஒளிமயமாக விளங்கிய தமிழ்நாடு தற்போது இருண்ட தமிழ் நாடாக மாறிவிட்டது. கடுமையான மின்வெட்டு காரணமாக, தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் அராஜகம், அட்டூழியம், வன்முறை ஆகியவற்றின் மூலம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கருணாநிதி திட்டம் தீட்டியிருக்கிறார்.

இதன் அடிப்படையில் தான், காவல் துறை மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகளை நள்ளிரவில் தொந்தரவு செய்தல்; தேர்தல் பணியாற்றும் அ.தி.மு.க.வினர் மீதும், துடிப்புடன் களப் பணியாற்றி வரும் இளைஞர் பாசறை உறுப்பினர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலை நடத்துதல், அ.தி.மு.க.வினரின் வாகனங்களை சேதப்படுத்துதல் என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க.வினர் மீது யார் தாக்குதல் தொடுத்தாலும், அதை காவல் துறை கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் பணியாற்றும் அ.தி.மு.க.வினரை மிரட்டி, ஒரு நாள் முன்னதாகவே வெளியேற்றிய காவல் துறை, தி.மு.க.வினரை தொகுதிகளில் திரிய விட்டிருக்கிறது.

இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்பது போகப் போகத் தான் தெரியும். எது எப்படியோ, இந்த அமைப்புகளைவிட அதிக அதிகாரம் படைத்தவர்கள், சர்வ வல்லமை படைத்தவர்கள் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் தான்.

திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோதச் செயல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், பண பலம், ரவுடிகள் பலம் உள்ளிட்டவற்றுக்கு ஒரு முடிவு கட்டும் வகையிலும், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கும் வகையிலும், உங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல், சிதறாமல், எம்.ஜி.ஆர். கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை' சின்னத்தில் அளித்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயகம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்த, உங்களின் வாக்குரிமையை நிலைநாட்டி, தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க, சிறந்த ஜனநாயகச் சூழ்நிலை வளர, அனைத்துத் தரப்பு மக்களும் அ.தி.மு.க.விற்கு நல் ஆதரவினை நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+