அதிமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு-ஜெ. வீட்டை முற்றுகையிட்ட திருச்செங்கோடு அதிமுகவினர்
சென்னை: திருச்செங்கோடை சேர்ந்த அதிமுகவினர் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உட் கட்சி பிரச்சனைகளுக்காக சமீபகாலமாக ஜெயலலிதாவின் வீட்டை அதிமுகவினர் முற்றுகையிடுவதை வழக்கமாகிவிட்டது.
நேற்று பிற்பகலில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த அதிமுகவினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அருகே குவிந்தனர்.
அவர்கள் கையில் கோரிக்கைகள் அடங்கிய போர்டுகளை வைத்திருந்தனர்.
அதில், முன்னாள் அமைச்சரும் திமுகவுக்குத் தாவியவருமான செல்வகணபதிக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏ தங்கமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
கட்சியின் கிளை நிர்வாகிகள் தேர்வில் குளறுபடி செய்யும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்தன.
இந்தக் கோரிக்கைகளோடு ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், அவர்களை ஜெயலலிதாவின் வீட்டு பாதுகாவலர்கள் உள்ளே விடவில்லை.
இதையடுத்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வெளியே வந்தார். அவரை இரு பிரிவாகப் பிரிந்து சந்தித்த அதிமுகவினர் புகார் மனுக்களை தந்தனர்.
இதை ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்ததையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications