புதுக் கட்சி தொடங்க ஜெகன் மோகன் ரெட்டி திட்டம்?
ஹைதராபாத்: முதல்வர் பதவி கிடைக்காததால் பெரும் கடுப்புடன் இருந்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போதைய தெலுங்கானா குழப்பத்தைப் பயன்படுத்தி காங்கிரஸிலிருந்து வெளியேறி புதுக் கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தந்தை ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு முன்பே அவரது அரசியல் வாரிசாக கோடிட்டுக் காட்டப்பட்டவர் ஜெகன். ஆனால் ராஜசேகர ரெட்டி திடீரென மரணமடைந்ததால், உடனடியாக ஜெகன்மோகனை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இவர்களை அமைதியாக இருந்து சமாளித்த காங்கிரஸ் மேலிடம், ரோசய்யாவை நிரந்தர முதல்வராக்கி விட்டது. பிறகு பார்க்கலாம் என ஜெகன் மோகன் ரெட்டிக்கு கதவை மூடி விட்டனர்.
இதனால் ஜெகன் குரூப் படு கடுப்பானது. இருந்தாலும் வேறு வழியில்லாததால் அமைதி காத்து வந்தது. இந்த நிலையில்தான் தெலுங்கானா விவகாரத்தின் ரூபத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு 'வேட்டையாட விளையாட' வாய்ப்பு கிடைத்தது.
அவரது ஆதரவு எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் குறுக்கே புகுந்து குண்டக்க மண்டக்க குழப்பியதால் கட்சி கலகலத்துப் போய்க் கிடக்கிறது.
தற்போது தெலுங்கானாவுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆதரவு தெரிவித்து விட்டதால் ஆந்திராவின் இதர பகுதிகளில் காங்கிரஸுக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து காங்கிரஸில் இருந்தால் நமது பெயரும் நாறிப் போய் விடுமோ என்று பயப்படுகிறாராம் ஜெகன் மோகன் ரெட்டி.
மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காங்கிரஸை விட்டு வெளியேறி புதுக் கட்சியைத் தொடங்கி விடும் யோசனையிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
இதுகுறித்து ஜெகன் தரப்பு தலைவர் ஒருவர் கூறுகையில், இப்போது மக்களுடன் இருக்க வேண்டிய நேரம். தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி போராட்டத்தைத் தொடங்கி விட்டார். சந்திரபாபு நாயுடுவும் குதிக்கப் போகிறார்.
இவர்கள் இருவரும் காங்கிரஸை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நாங்களும் காங்கிரஸில் இருப்பது சரியாக இருக்காது. எனவே புதுக் கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனை நடந்து வருவது உண்மைதான் என்றார்.
ஜெகன்மோகன் புதுக் கட்சி தொடங்கினால் அவரது பின்னால் ராஜசேகர ரெட்டியின் ஆதரவு அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பெருமளவில் திரண்டு வருவார்கள் என ஜெகன் மோகன் குரூப் நம்புகிறது. ஆனால் அப்படி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications