தெலுங்கானாவை வலியுறுத்தி நாளை பஸ் யாத்திரை தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த முடிவில் இருந்து பின்வாங்கினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். போலீஸ், ராணுவம் எது வந்தாலும் எங்களை கட்டுப்படுத்த முடியாது என டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்
மேலும் தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி நாளை முதல் பஸ் மூலம் யாத்திரை ஒன்றையும் ராவ் தொடங்குகிறார்.
ஆந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் இன்று 11வது நாளாக நீடித்து வருகிறது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடப்பா மாவட்டம் புலிவேந்தலாவில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
கடப்பா, விஜயவாடா, சித்தூர், கர்னூல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. புலிவேந்தலாவில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம், தாலுகா அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
முழு அடைப்பால் பல மாவட்டங்களில் பஸ் மற்றும் வாகனங்கள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டு, பதட்ட நிலை நீடிக்கிறது. ராயலசீமா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள் தாக்கப்பட்டதாலும், பஸ்கள் ஓடாததாலும் அரசு போக்குவரத்து கழகத்துக்கு இதுவரை ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதோலி, ரேனிகுண்டா, ஆகிய இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதனால் திருப்பதி-ஹீப்ளி மற்றும் மும்பை ரயில் பாதையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், 'தெலுங்கானா விஷயத்தில் மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையி்ல், 'தெலுங்கானா விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்புக்காக தான் காத்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை தெலுங்கானா தனி மாநிலம் அமைந்துவிட்டது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். போலீஸ் அல்லது ராணுவமே வந்தாலும் எங்கள் லட்சியத்தை நாங்கள் அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
ஏற்கனவே அறிவித்ததற்கு மாறாக மத்திய அரசு நடந்துகொண்டால் காங்கிரஸ் தலைவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக ஒரு தலித்தை தான் அமர வைப்போம்' என்றார்.
பஸ் யாத்திரை:
இந்த நிலையில், தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தெலுங்கானா பகுதி முழுவதும் யாத்திரை செல்ல ராவ் முடிவு செய்துள்ளார்.
நாளை தொடங்கும் இந்த யாத்திரையை அவர் பஸ் மூலம் மேற்கொள்ளவுள்ளார். உண்ணாவிரதம் இருந்து மீண்டுள்ள ராவின் உடல் நிலை இன்னும் முழுமையாக சரியாகவில்லை. இதனால் அவரது யாத்திரையின்போது டாக்டர்களும் உடன் செல்வார்கள் எனத் தெரிகிறது.
தெலுங்கானா முழுவதும் இந்த யாத்திரையை ராவ் மேற்கொள்ளவுள்ளார்.
ஒன்றரை லட்சம் மாணவர்கள் போராட்டத்தில்...:
இதற்கிடையே, ஆந்திர பல்கலைக்கழகம், ஸ்ரீகிருஷ்ண தேவராயர் பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், பத்மாவதி பல்கலைக்கழக மாணவர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாகப்பட்டினத்தில் தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பிரிவினைக்கு எதிர்ப்பு தெரி்வித்து வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகள் இயங்க முடியாத நிலையும் உருவாகி உள்ளது.
காங் மீது கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு:
தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்த முடிவு 'அவசரமாக எடுக்கப்பட்ட தாமதமான முடிவு' என முதல்வர் கருணாநிதி விமர்சித்திருந்தார்.
அதேபோல், காங்கிரசின் மற்றொகு முக்கிய கூட்டாளியான தேசியவாத காங்கிரசும் இவ்விஷயத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட முடிவை ரசிக்கவி்ல்லை. தே.கா.கட்சியின் மூத்த தலைவர் பி.ஏ.சங்மா இதுகுறித்து கூறுகையில்,
'தனி மாநிலம் உருவாக்குவதாக மத்திய அரசு அவசரப்பட்டு வெளியிட்ட அறிவிப்பு புது பிரச்னையை நாட்டில் உருவாக்கிவிட்டது. இதுபோன்ற அணுகுமுறைக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது' என்றார்.












Click it and Unblock the Notifications