திருப்பதி - ஜனவரி 1ம் தேதி முதல் இலவச லட்டு கிடையாது
திருப்பதி: திருப்பதியில் ஜனவரி 1ம் தேதி முதல் லட்டு இலவசமாக வழங்கப்படாது. அதேபோல தற்போது ஒரு லட்டின் விலை ரூ. 5 என்று இருப்பதை ரூ. 10 ஆக உயர்த்தியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம்.
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியக் கூட்டம் அதன் தலைவர் ஆதிகேசவலு நாயுடு தலைமையில் கூடியது. அப்போது 2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் லட்டின் விலையை ரூ. 5லிருந்து ரூ. 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஜனவரி 1ம் தேதி முதல் இலவச லட்டு விநியோகத்தை நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இலவச லட்டுக்குப் பதில் இனிமேல் ஒவ்வொரு பக்தரும் ரூ. 10 கொடுத்து ஒரு லட்டு பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்சம் 2 லட்டுக்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தொடருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
திருமலையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 35 கோடி நிதியை ஒதுக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருமலையில் ஒரே நேரத்தில் 100 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய தேவஸ்தானம் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய திருமண மண்டபம் கட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், வருகிற 31 ந் தேதி மாலை 5.30 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை சந்திரகிரகணத்தையொட்டி கோவில் நடை சாத்தப்படும். பின்னர் இரவு 2.30 மணிக்கு கோவில் திறந்து சுத்தப்படுத்தப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு இலவச தரிசனம் மற்றும் புத்தாண்டு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் முடிவாகியது.
இலவச லட்டுக்காக திருப்பதி கோவில் தேவஸ்தானம் ஆண்டு தோறும் ரூ. 40 கோடி செலவிடுகிறதாம். ஆனால் இந்த நிதியை புரோக்கர்கள் புகுந்து சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இலவச லட்டுத் திட்டத்தையை நிறுத்தும் முடிவுக்கு கோவில் வாரியம் வந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications