மாயாவதியின் இல்லம் அருகே கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை
லக்னோ: லக்னோவில் முதல்வர் மாயாவதி இல்லத்தின் அருகே மர்ம நபர்களால் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதியின் இல்லம் லக்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் கான்ஸ்டபிள் ராம்லால் கவுதம் (57) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து தாலிபாக்கில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்ட போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எடுத்துச் சென்று விட்டனர்.
ராம்லால் ரத்தவெள்ளத்தில் இருப்பதை அங்கு வந்த சிலர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் அங்கு வந்தனர்.
தலையின் பக்கவாட்டுப் பகுதியில் குண்டடி பட்டு சுருண்டு விழுந்து கிடந்த கான்ஸ்டபிள் ராம்லாலை போலீசார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். முன் விரோதம் காரணமாக ராம்லாலின் எதிரிகள் இந்த வேலையை செய்திருப்பார்கள் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
ஒரு மாநில முதல்வரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Click it and Unblock the Notifications
