சென்னையில் மேலும் 1,500 பஸ்களில் ஜிபிஎஸ்!
சென்னை: சென்னையில் மேலும் 1,500 மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3,257 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை இயக்கப்படும் இந்த மாநகர பஸ்களில் தினமும் சராசரியாக 50.35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன என்பதை செயற்கைக்கோள் உதவியுடன் அறிந்து பொதுமக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கும் ஜி.பி.எஸ் வசதி கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதலில் 55 பஸ்களில் ஜி.பி.எஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை மற்றும் அடையாறு உள்ளிட்ட குறிப்பிட்ட சில வழித்தடங்களில் முக்கிய பஸ் நிறுத்தங்களில் மட்டும் டிஜிட்டல் பலகையில் பஸ்கள் வரும் நேரம், எண் ஆகியவை குறித்து அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் 1,500 மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி நிதி அனுமதிக்கப்பட்டது.
இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் நவீன தகவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 'அஷோக் லேலாண்ட் டெலிமாட்டிக்ஸ் பிசினஸ் யூனிட்' மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் எஸ்எம்எஸ் மூலம் தொடர்புகொள்ளும் பயணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணுள்ள மாநகர பஸ் வந்து கொண்டிருக்கும் இடம், அந்த பஸ் வந்து சேரும் உத்தேச நேரம் குறித்து அறிவிக்கும் வசதியையும் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications