மாவோயிஸ்ட் போராட்டம்: நேபாளம் ஸ்தம்பிப்பு-மீண்டும் அரசியல் நெருக்கடி
காத்மாண்டு: நேபாளத்தில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நேபாள அரசுக்கும் மாவோயிஸ்டுகளும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகளை ராணுவத்தில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அவர்களைச் சேர்க்க ராணுவ தலைமை தளபதி கட்டாவால் ஆர்வம் காட்டவில்லை என்று கூறி அவரை அப்போது பிரதமராக இருந்த பிரசண்டா பதவி நீக்கம் செய்தார்.
ஆனால் அதிபர் ராம் பரண் யாதவ் அவரை மீண்டும் பதவியில் நியமிக்க முடிவு செய்தார். இதைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக 3 நாள் போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நேற்று துவங்கினர். போராட்டத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காத்மாண்டு உள்பட பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான சண்டையில் 24 பேர் காயமடைந்தனர். திறந்து வைக்கப்பட்டிருந்த அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாவோயிஸ்ட் கட்சியினர் தீவைத்தனர். பள்ளிகள், கல்லூரிகள், தனியார் ஆலைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன.
ஆம்புலன்ஸ் வேன்கள், பத்திரிகை வாகனங்கள், சுற்றுலா வேன்கள் ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வாகனங்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரும்பாலான இடங்களுக்கு நடந்தே சென்று வந்தனர்.
நேபாளத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பம் குறித்து சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications