வர்த்தக மாநாடு 2010: ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றம்
ஹைதராபாத்: ஆந்திராவில் நிலவும் மோசமான அரசியல் சூழலால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்போது ஹைதராபாத்தில் நடக்கவிருந்த 'கூட்டாண்மை மாநாடு 2010 (Partnership Summit 2010)' சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிஐஐ வட்டாரம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த மாநாடு ஹைதராபாத்துக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகவும் மதிப்புமிக்க வர்த்தக நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது.
ஹைதராபாத்தில் வரும் ஜனவரி 22-ம் தேதி இம்மாநாடு நடக்கும் என்று கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தெலுங்கானா விவகாரத்தில் மாநிலமே கொந்தளித்துப் போய், அரசு அலுவல்கள், தனியார் நிறுவன நிர்வாகம் என மொத்தமாக ஸ்தம்பித்துள்ளன. எனவே இங்கு இந்த மாநாட்டை நடத்துவது உசிதமானதல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த ஆலோசனையை சிஐஐ ஏற்றது.
ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதாலேயே இந்த மாநாட்டை சென்னைக்கு மாற்றியுள்ளது சிஐஐ.
இந்தியாவின் வர்த்தக நகரங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த ஹைதராபாத்தின் இன்றைய நிலை குறித்து தாங்கள் நிஜமாகவே கவலை கொண்டிருப்பதாக முதலீட்டாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆந்திராவின் முக்கிய நகரங்களான விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் தொடர்ந்து இருவாரங்களாக தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருமளவு உற்பத்தி முடங்கிப் போயுள்ளது.












Click it and Unblock the Notifications