விசைத்தறி தொழிலாளர் பிரச்னை- பேச்சுவார்த்தை தோல்வி
நெல்லை: சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை தொடர்பாக நெல்லையில் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடருகிறது.
சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் ஊதிய உயர்வு, மற்றும் விடுமுறை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியிலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 804 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று இரவு பாளை தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளர் மற்றும் சங்க பிரதிநிதிகளிடையே பேச்சு வார்த்தை நடந்தது.
இதில் மதுரை பெரு மண்டல தொழிலாளர் இணை ஆணையர் ஜெயசிங்கன், நெல்லை தொழிலாளர் துணை ஆணையர் சுந்தர்ராஜன், அதிகாரி சுடலைராஜ், சங்கரன்கோவில் தாசில்தார் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த சிவசங்கரன், ஜெகநாதன் மற்றும் சங்கரன்கோவில் சிறு விசைதறியாளர்கள் சங்க செயலாளர் அருணகிரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படாததால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை 23ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications