For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டது எப்படி- இலங்கையிடம் விளக்கம் கேட்கிறது ஐநா

By Staff
Google Oneindia Tamil News

ஐநா: இலங்கை போரின் கடைசி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து தகுந்த விளக்கம் அளிக்குமாறு இலங்கை அரசுக்கு ஐ.நா கடிதம் அனுப்பியுள்ளது.

ராணுவத்திடம் சரணடைய வந்த இம்மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஃபொன்சேகா அளித்த பேட்டியின் அடிப்படையில் இலங்கைக்கான ஐ.நா சிறப்பு பொறுப்பாளர் ஃபிலிப் ஆல்ஸ்டன் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இலங்கை அரசின் பிரதிநிதியான ஷெனுகா செனவிரத்னாவுக்கு டிசம்பர் 18ம் தேதியிட்டு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் போர் கடைசி கட்டத்தை அடைந்த போது, ராணுவத்திடம் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களின் குடும்பத்தை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக அப்போதைய ராணுவ தளபதியான சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

தி சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தின் '58வது பிரிகேட்' உடன் சம்பந்தப்பட்ட சில பத்திரிகையாளர்களும் இதே போன்ற குற்றச்சாட்டை உறுதி செய்வதாக கூறுகிறார்கள்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளித்தால் நல்லது. 1. கடந்த மே மாதம் 18ம் தேதி நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் கொல்லப்பட்டதாக சரத் ஃபொன்சேகா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானது தானா, இல்லையெனில் அவை தவறு என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் மற்றும் தகவல்களை காட்டுங்கள்.

2. நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் பற்றி எவ்விதமான தகவல்களை இலங்கை அரசு வைத்துள்ளது?

3. இதுகுறித்து இலங்கை அரசு பதில் அளிக்கும் முன்னர், ராணுவம், போலீஸ், நீதித் துறை மற்றும் இதர விசாரணை அறிக்கைகளுடன் அந்த பதில்களை சரி பார்த்துக் கொள்ளவும்.

இந்த கேள்விகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விளக்கத்தை உண்மை பிறழாமல் மனித உரிமை கவுன்சில் முன் சமர்ப்பிபேன் என்று ஆல்ஸ்டன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கை போர் முடிவுக்கு வந்த சூழலில் மே 16 முதல் 19 வரையிலான காலகட்டத்தில், ராணுவத்திடம் சரணடையும் எண்ணத்துடன் வெள்ளைக் கொடியோடு விடுதலைப் புலிகள் தலைவர்கள் எல்லோரையும் சுட்டுத்தள்ளுமாறு ராணுவ அமைச்சர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார்' என பேட்டியில் கூறியிருந்தார் முன்னாள் சரத் ஃபொன்சேகா.

ராஜபக்சேவால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட வேகத்தில் இவ்வாறு பேட்டியளித்து விட்டு, பின்னர் இலங்கை அரசு ராணுவ ரகசிய பாதுகாப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி எச்சரித்ததால், உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

'எனது கருத்துக்கள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சமயத்தில் யாரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன். போருக்கு பின்னர் ஜெனரல் ஷாவேந்திர சில்வாவுக்கு ராணுவ அமைச்சர் சட்டவிரோதமான ஒரு உத்தரவை பிறப்பித்தார் என எனக்கு பின்னர் தெரியவந்தது. ஆனால் நாங்கள் அதை செயல்படுத்தவில்லை' என ஃபொன்சேகா சமாளித்துள்ளார்.

ஆனால், ஆல்ஸ்டன் எழுதிய கடிதத்தின் வரிகளை பார்த்தால் அவர் ஃபொன்சேகாவின் மறுப்பு அறிக்கையை பொருட்படுத்தவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இக்கடிதம் குறித்து இலங்கை அரசு தரப்பில், 'ஐநா பொறுப்பாளர் அனுப்பியுள்ள கடித விவரங்களை கவனமாக ஆராய்ந்து வருகிறோம். அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க முடியும்' எனக் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X