இந்தியா என்பது ரயில் மாதிரி-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியா என்பது ஒரு ரயிலை போன்றது. அந்த ரயிலின் பெட்டிகளாக கருதப்படும் மாநிலங்கள் கழன்றுவிடாமல் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

வாரம் 5 முறையாக அதிகரிக்கப்பட்ட சென்னை- மங்களூர் விரைவு ரயில், மதுரையில் இருந்து நீட்டிக்கப்பட்ட ஜம்முதாவி- திருநெல்வேலி விரைவு ரயில், திருவனந்தபுரம் வழியாக திருநெல்வேலி- பிலாஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், வாரம் 3 முறை கன்னியாகுமரி- ராமேஸ்வரம் அதிவேக ரயில் ஆகியவற்றின் தொடக்கவிழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது.

ரயில்வே இணையமைச்சர் இ.அகமது தலைமையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி இந்த ரயில் சேவைகளை தொடங்கி வைத்து பேசுகையில்,

விஞ்ஞான வளர்ச்சியில் அற்புதங்கள் எல்லாம் நிகழ்கிற இந்த நேரத்திலேதான், அதே விஞ்ஞான வளர்ச்சியினால் உலகம் மேலும் வெம்மையாகி, இப்போது வந்திருக்கின்றனவே சில திரைப்படங்கள்- உலகம் அழியப் போகிறது என்று, அப்படி பயமுறுத்துகிற படங்கள், அந்த அளவுக்கு விஞ்ஞானம் ஆபத்தாகப் போய் சேருமோ என்கிற பயமும் நமக்கு ஏற்பட்டுத்தான் இருக்கிறது.

ஆனால், பயத்தைப் போக்கவும், விஞ்ஞான ரீதியாக அதைத்தடுத்து நிறுத்தவும், உலகத்திலேயே இன்றைக்கு விஞ்ஞானிகள் எல்லாம் ஒன்றுகூடி, ஆய்வுகளிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.

நமக்கு இந்த தலைமுறையிலே ஆபத்து இல்லை. இந்த தலைமுறையிலே நமக்கு ஆபத்து இல்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு ஆபத்து வந்தால் நமக்கு என்ன என்று எண்ணக் கூடாது. அது மனிதத் தன்மையல்ல என்பதற்காகத்தான் நான் இப்போது சொல்லி வைக்கின்றேன்.

சில நேரங்களிலே ரயில் விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த விபத்துகளை நாம் சந்திக்கும்போது அதற்கான காரணங்களை ஆராய்ந்து, விசாரணை நடத்தி காரணமானவர்களை தண்டிக்கிறோம். எச்சரிக்கிறோம்.

ஆனால், அந்த ரயில் பெட்டிகளில் வந்த மக்கள் அடிபட்டும், தலை நொறுங்கியும், உயிர் இழந்தும் மறைந்து போயிருக்கிறார்களே, அவர்களுக்கு செய்கின்ற உதவி, நாம் தருகிற நிதியோ எதிர்கால வாழ்க்கைக்காக நாம் செய்துகொடுக்கிற காரியங்களோ போதுமானது அல்ல. அதிலே மாத்திரம் நாம் நிம்மதி அடைய முடியாது. அதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரம், இனி அடுத்து ஒரு ரயில் என்ஜின் இங்கே கவிழக் கூடாது என்ற அளவிலே நாம் நம்முடைய திட்டங்களை, நம்முடைய ரயில்வே இலாகாவை சீர்படுத்த வேண்டும்.

ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எல்லாம் தண்டவாளத்திற்கு மேலே ஒரு நாலைந்து அங்குலத்திற்கு மேலே ரயில் போகிறது. தண்டவாளத்திற்கும் அதற்கும் தொடர்பில்லாமல் ரயில் போய்க்கொண்டிருக்கிறது. சில நேரங்களிலே அரசுக்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லாமல் அரசு நடைபெறுகிறது அல்லவா, அதைப்போல, தண்டவாளத்தை தொடாமலே ரயில் போகிற அந்த விஞ்ஞான புதுமையை எல்லாம் இன்றைக்கு நம் காண்கிறோம்.

அப்படிப்பட்ட விஞ்ஞான மறுமலர்ச்சி இந்தியாவுக்கு வந்து, தமிழ்நாடும் அந்த பலனைப் பெற்று, நம்முடைய பயணத்திலே இன்னும் எளிமையை, இன்னும் லகுவான தன்மையைப் பெற வேண்டும்.

அப்படிப் பெறுகிற நேரத்திலேயே நாம் இன்றைக்கு இருக்கிற ரயில் பெட்டி, ஒரு ரயில் எந்த உண்மையை நமக்கு நாட்டளவில், தேசிய அளவில் எடுத்துச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

10 பெட்டிகளோ 12 பெட்டிகளோ சேர்ந்துதான் ஒரு ரயில். ரயிலில் போகிறோம் என்றால் ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தால் முன்னால் இருக்கிற என்ஜின் நம்மை இழுத்துச் செல்கிறது. நாம் பெட்டியிலேயே இருக்கிறோம். இதுதான் ஒரு நாட்டின் அமைப்பு. இந்தியாவைப் பொருத்தவரையில் நமக்கு என்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால், அந்த என்ஜினிலே இன்றைக்கு கோர்க்கப்பட்டிருக்கிற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான் தமிழ் மாநிலம்.

நான் இதைச் சொல்கிற காரணத்தினால் இந்த பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்த கோளாறை இன்றைக்கு இந்தியாவை கட்டி ஆளுகிற, நிர்வாகம் நடத்துகிற மத்திய அரசு, அந்த பெட்டிகளை தன்னோடு சேர்த்து இழுத்துச் செல்கின்ற லாவகத்தை பெற வேண்டும். அதேநேரத்தில் பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்றுவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று இணைந்திடாமல், கழன்றுபோனால் பிறகு இந்தியா என்கிற ஒரு தேசியநிலை நமக்கு இல்லாமல் போய்விடும்.

இந்தியா ஒரு பெரிய நாடு. அதனால்தான் வல்லரசு நாடுகள் எல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலே ஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகள் எல்லாம் கருதுகின்றன. அந்த பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கிற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பெட்டிகளை இழந்தால், பெட்டிகளை விட்டு விட்டால், என்ஜின் மாத்திரம் தனியாக போனால், தனியாக போகிற என்ஜினில் யாரும் ஏற மாட்டார்கள்.

அந்த ரயிலை ஓட்டுகிற டிரைவரை தவிர வேறு யாரும் என்ஜினில் இருக்க மாட்டார்கள். ஆகவே, பெட்டிகளையும் பாதுகாத்து என்ஜினையும் பாதுகாத்து ரயிலை ஓட்ட வேண்டும். அப்படி ஓடுகிற ரயில் எங்களுக்குத் தேவையான அளவுக்கு இன்னும் கிடைக்கவேண்டும்.

நண்பர் அகமதுவிடத்திலே சொல்ல வேண்டுமானால், முன்பு இருந்த ரயில்வே மந்திரிகள் தஞ்சை மாவட்டத்தில் என்னுடைய ஊர் திருக்குவளை வரையில் ரயில் பாதை போட்டுத் தருவதாக சொன்னார்கள். வரும் வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன். அகமது அவர்களாவது அந்த வாக்குறுதியை ஞாபகத்தில் வைத்து நிறைவேற்றித் தர வேண்டும்.

இது,​​ சுயநலம் தான்.​ ஒவ்வொருவருக்கும் வரும் சுய நலத் தேவைகளை பொதுநல நோக்கோடு பார்த்து நிறைவேற்ற வேண்டும்.

அகமது,​​ என்னை தலைவர் என்று குறிப்பிட்டார்.​ என்னை அப்படி அழைப்பது அவருக்கு வழக்கம்.​ அதற்காக அவரை நான் தொண்டன் என்று கூறமாட்டேன்.​ அவர் எனக்கு நண்பர்.​ நண்பர் என்ற முறையில் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன.​ அகமது இணை அமைச்சராக இருப்பது மம்தாவுக்கு அல்ல.​ மேலும் பல ரயில்வே திட்டங்களை தமிழகத்துக்கு தரவேண்டும்.​ எங்களுக்கு இணை அமைச்சர் துணையாக இருந்து ரயில்வே திட்டங்களை வழங்க வேண்டும் என்றார் கருணாநிதி.

தமிழகம் ஒரு முன் மாதிரி-அகமது:

அமைச்சர் அகமது பேசுகையில், வளர்ச்சிப் பணி ஆற்றுவதிலும், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டுப் பணியிலும் மற்ற மாநிலங்களுக்கு முதல்வர் கருணாநிதி முன் மாதிரியாக திகழ்கிறார். அவர் உங்களுக்கு மட்டும் தலைவர் அல்ல. எங்களுக்கும் தான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+