சென்னையில் டாடா உருவாக்கும் ராமானுஜம் ஐடி சிட்டி!
மும்பை: சென்னையில் ரூ 3500 கோடி முதலீட்டில் 'ராமானுஜம் ஐடி சிட்டி' எனும் புதிய வளாகத்தை உருவாக்குகிறது டாடா நிறுவனம்.
டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடட் (TRIL) உருவாக்கும் இந்த ராமானுஜம் ஐசி சிட்டி, சென்னை தரமணி அருகே 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. குடியிருப்புகள், மார்க்கெட் என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த வளாகம் உருவாகிறது.
டிட்கோ மற்றும் இந்திய ஓட்டல்கள் நிறுவனமும் டாடாவுடன் இணைந்து இந்த ஐடி வளாகத்தை உருவாக்குகின்றன. கணித மேதை ராமானுஜத்தை கவுரவப்படுத்தும் வகையில் அவர் பெயரால் இந்த வளாகம் அமைந்துள்ளதாக டாடா நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சர்வதேசத் தரத்தில் உருவாகும் இந்த வளாகத்தில் உள்ள குடியிருப்புகள் கேம்பிரிட்ஜ் கிரீன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. மொத்தம் 150 ஃப்ளாட்டுகள் கொண்ட இந்த குடியிருப்புப் பகுதி, மே 2010-ல் பயன்பாட்டுக்கு தரப்படும். ஒவ்வொன்றும் 2000 முதல் 3000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளன.
'சென்னை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு ஐடி நகரமாகிவிட்டது. மிக நவீன வீடு தேடுவோர் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த ராமானுஜம் ஐடி சிட்டி அமைக்கப்பட்டுள்ளது' என TRIL நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் உபேல் தெரிவித்தார்.
இந்த வளாகத்தினை நியூயார்க் நகரைச் சேர்ந்த ஸ்கிட்மோர் ஓவிங்ஸ் மற்றும் மெர்ரில் நிறுவனம் வடிவமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications