சபரிமலை குண்டு வெடிப்பு: பீதி வேண்டாம்-அமைச்சர்
சபரிமலை: சபரிமலையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக பக்தர்கள் பயப்பட வேண்டியதில்லை. இதுபற்றி விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம் அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் சனிக்கிழமை அன்று மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சரம்குத்தி அருகிலும், சபரிமலையில் சுவாமி ஐயப்பன் பாதையிலும் 4 முறை நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
இதனால் சாலக்காயம், நிலைக்கல், பிலாப்பள்ளி, இலவுங்கல் ஆகிய இடங்கள் முதல் பம்பை, சன்னிதானம் வரை அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எனினும் நேற்று பம்பை செளிக்குழி பகுதியில் 5வது முறையாக மீண்டும் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனடியாக போலீசாரும், அதிரடிப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
சபரிமலையில் நடந்த குண்டு வெடிப்புகள் காரணமாக பக்தர்கள் பயப்பட வேண்டியதில்லை என்று தேவசம் அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றி விசாரிப்பதற்கும், மேலும் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்க இன்று சபரிமலையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் கேரள உள்துறை ஒத்துழைப்புடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications