சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்லும்-அனிதா
மதுரை: வரும் 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் திமுகவின் வெற்றி தொடரும் என்று திருச்செந்தூர் இடைத் தேர்தலில் வென்ற அக் கட்சியின் வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் வென்ற அனிதா ராதாகிருஷ்ணன் மதுரையில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
திருச்செந்தூரில் திமுக அமோக வெற்றி பெற முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு 3 ஆண்டுகள் செய்துள்ள சாதனைகளே காரணம்.
மேலும் மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்தல் வியூகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் மூலம் மக்களுக்கு தொண்டாற்றியதற்கு கிடைத்த வெற்றியாகும் இது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நான் வெற்றி பெற்றேன். அதே தொகுதியில் இப்போது திமுக வேட்பாளராக 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது.
வரும் 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும் என்றார்.
அழகிரியுடனான இந்த சந்திப்பின்போது, அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பிகள் சிவானந்தன், சண்முகநாதன், மகன்கள் அனிதா பத்மநாபன், அனிதா ராமகிருஷ்ணன், அனிதா மகேஸ்வரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications