10 நாள் தொடர் சாலை மறியல்-ராமதாஸ் அறிவிப்பால் சலசலப்பு

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த கடைசி காலத்தில் சாலை மறியல் செய்து வட மாவட்டங்களில் பிரபலமானவர் டாக்டர் ராமதாஸ்.
அப்போதைய வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தொடர் சாலை மறியல் போராட்டத்தின்போது தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மரங்களை வெட்டிப் போட்டு பெரும் போராட்டத்தை நடத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்தார்.
இந் நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 10 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளதால் பழைய பாதைக்கு அவர் மீண்டும் திரும்புகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே வெங்கரையில் நாமக்கல்- கரூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு கபிலர்மலை தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள எல்லா ஜாதிக்கும் வெறி பிடித்து விட்டது. நமக்கு மட்டும் தான் உணர்வு உள்ளது. வன்னியர் ஜாதி தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி. 2011ல் தமிழகத்தை ஆளப்போகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசின் குறைகள் குறித்து நாள்தோறும் அறிவிப்பு வெளியிடுவேன். அதற்கு முதல்வர் கருணாநிதி, 2011-ல் ஆளப் போகிறீர்கள். அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அவர் வாக்கு பலிக்க வேண்டும்.
தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உள்ள கலைஞர் ஜாதி தமிழகத்தை ஐந்தாவது முறையாக ஆளுகிறது. மலையாளத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 10 ஆண்டு முதல்வராக இருந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த ஜெயலலிதா பத்து ஆண்டு முதல்வராக இருந்தார். நாம் ஏன் தமிழகத்தை ஆளக் கூடாது?.
கருணாநிதி சூழ்ச்சியால் 107 ஜாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி 100 இடங்களில் ஏழு இடங்கள் மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. அனைத்து ஜாதிகளையும் கணக்கெடுத்து, அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
இடஒதுக்கீடு கொடுக்கவில்லையெனில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் 10 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். "காற்றே அசையாதே; சொல்வது வன்னியன்' என்று சொல்லும் அந்த நிலை உருவாகும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications