காங்கிரஸ் பலவீனமானால், நாடும் பலவீனமாகும்- பிரதமர் மன்மோகன்
டெல்லி: காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்தால், நாடும் பலவீனமடையும். எனவே காங்கிரஸ் கட்சியை வலிமையான அரசியல் இயக்கமாக்குவது நம்முடைய கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டுவிழா தொடக்கம் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல்நாட்டு விழா ஆகியவை நேற்று நடைபெற்றது.
விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்தன் திவேதி, பொருளாளர் மோதிலால் வோரா உட்பட பல்வேறு முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா இருவரும் திறந்து வைத்தனர். அடுத்த ஆண்டுக்குள் புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் பிரதமர் மன்மோகன் பேசுகையில், '21ம் நூற்றாண்டு குறித்து ராஜீவ்காந்தி கண்ட கனவுகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது.
தீவிரவாதம், வகுப்புவாதம், மதவாதம், நக்சல் வன்முறை போன்ற சவால்களை நாடு எதிர்கொள்ளும் சமயத்தில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாணும் தகுதி வாய்ந்த ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான்.
காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்தால் நாடும் பலவீனம் அடைந்து விடும். எனவே, காங்கிரஸ் கட்சியை வலிமையான அரசியல் இயக்கமாக்குவது நம்முடைய கடமை' என்றார்.
சோனியாகாந்தி பேசுகையில், 'சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மக்களின் மேம்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் அடுத்த ஓராண்டுக்குள் பூர்த்தி செய்வோம்' என்றார்.












Click it and Unblock the Notifications