கப்பலில் தவிக்கும் 250 தமிழர்கள்-ஆஸி.க்கு இந்தோனேசியா நெருக்குதல்
ஜகார்த்தா: கப்பலில் தத்தளித்து வரும் 250 இலங்கைத் தமிழர்களை படகை விட்டு கீழிறிக்க ஆஸ்திரேலிய அரசு சில உத்தவாதங்களை அளிக்க வேண்டும். அப்போதுதான் நீடித்து வரும் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
கடந்த 11 வாரங்களாக 250க்கும் மேற்பட்ட தமிழர்கள், இந்தோனேசிய கடல் பகுதியில் முகாமிட்டுள்ளனர். தங்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கப்பட்டால் மட்டுமே கப்பலை விட்டு இறங்குவோம் என அவர்கள் கூறி விட்டனர். சமீபத்தில் இந்தக் கப்பலில் இருந்த ஜேக்கப் கிறிஸ்டியன் என்பவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரச்சினைக்கு முடிவு ஏற்பட ஆஸ்திரேலிய அரசு இறங்கி வர வேண்டும். சமூக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெகு பைசாய்சியா கூறுகையில், ஆஸ்திரேலிய சிறப்பு ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டும். ஓசியானிக் வைகிங் கப்பலில் இருந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் போன்ற ஒப்பந்தத்தை அறிவித்தால்தான் இந்த சிக்கல் தீர வழி ஏற்படும்.
ஏதாவது ஒரு ஏற்பாட்டை செய்தாக வேண்டும். ஆஸ்திரேலிய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு சம்பவங்களும் (தமிழர்கள் அகதிகளாக வந்தது) ஒரே நேரத்தில் நடந்துள்ளன. எனவே ஒரு தரப்புக்கு (78 தமிழர்களுக்கு) மட்டும் அடைக்கலம் தந்து விட்டு, இன்னொரு தரப்புக்கு (250 தமிழர்கள்) தராமல் இருப்பது சரியாக இருக்காது என்றார்.
ஆனால் ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ள தமிழர்களுக்கு காட்டியதைப் போன்ற சலுகையை மற்றவர்களுக்கும் காட்ட முடியாது என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் கூறியுள்ளார்.
மேரக் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் உள்ள 250 பேரும் இந்தோனேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டனர். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஓகானர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications