கள்ளநோட்டு-சென்னையில் ஈரான் பெண் கைது
சென்னை: ரூ.25,000 கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மைலாப்பூரில் உள்ள 'லைப் ஸ்டைல்' ஷோரூமில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு தாயும், மகளும் அழகு சாதன பொருட்களை வாங்கினர். அவற்றுக்கு மூன்று 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.
ரூபாய் நோட்டுக்களை பார்த்து சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் விரைந்து சென்று சோதித்ததில் அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரிய வந்தது.
அந்த 2 பெண்களையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மொர்தாசா அஷ்ரப் (60), சலோமி (29) என்றும், ஈரான் தலைநகர் தெஹ்ரானை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.
மணப்பாக்கத்தில் உள்ள ராமச்சந்திர மிஷன் பாபுஜியின் ஆசிரமத்துக்கு வந்ததாக அவர்கள் கூறினர். இதையடு்த்து போலீசார் அந்த ஆசிரமத்துக்கு சென்று அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனையிட்டனர்.
அப்போது மொர்தாசாவின் பையில் 500 ரூபாய் நோட்டுகள் 47 இருந்தன. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள். மொத்தம் ரூ.25,000 கள்ள நோட்டுகளை கைப்பற்றி மொர்தாசா பீயையும் போலீசார் கைது செய்தனர்.
மொர்தாசா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'கடந்த 3ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தோம். ஆசிரமம் வந்து மன அமைதிக்காக தியானம் செய்து வருகிறோம். தெஹ்ரானில் எங்கள் நாட்டு பணத்தை சிலரிடம் இந்திய கரன்சியாக மாற்றினேன்.
தற்போது தான் அவை கள்ள நோட்டுகள் என தெரிகிறது. நான் கள்ள நோட்டை புழக்கத்தில் விடும் நோக்கத்தில் இங்கு வரவில்லை' என கூறியுள்ளார்.
எனினும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications