செங்கோட்டை-ஈரோடு தினசரி ரயிலை இயக்க கோரி உண்ணாவிரதம்
தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு கடந்த 2008-09 மத்திய ரயில்வே பட்ஜெட்டில் புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும் என அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் புதிய ரயில் அறிவிப்பு தாமதமானது. தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்று 6 மாதமாகியும் செங்கோட்டை-ஈரோடு பயணிகள் ரயிலை இயக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த பயணிகள் ரயிலை இயக்க வலியுருத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த போவதாக அறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்த தன்னர்வ தொண்டு அமைப்பின் சார்பில் நேற்று செங்கோட்டை ரயில் நிலையத்தின் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்திற்கு வர்த்தக சங்க தலைவர் எம்எஸ் முத்துசாமி தலைமை தாங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகள் சாவடி சொக்கலிங்கம் பிள்ளை, கோதையம்மாள் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர்.
தென்காசி, செங்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த ஊராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் பி.லிங்கம் கலந்து கொண்டு விரைவில் செங்கோட்டை-ஈரோடு ரயிலை இயக்க வேண்டும். லல்லு பிரசாத் யாதவ் கொண்டு வந்த திட்டத்தை தற்போதைய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, புறக்கணித்து வருகிறார்.
தமிழகத்தில் விருதுநகருக்கு தெற்கே, கொல்லம் வரையுள்ள பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே தொடங்கி 156 ஆண்டுகள் ஆகியும் ரயில்வே வெளிச்சம் படாமல் உள்ள பகுதிகளை மேம்படுத்த ரயில்வே திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
பல பகுதிகளில் மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்பும் செங்கோட்டை-புனலூர்-கொல்லம் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.
2008-09 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செங்கோட்டை-ஈரோடு ரயிலை விரைவில் இயக்கவில்லை என்றால் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும். ரயில்வே அறிவிப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும் என்றார்.













Click it and Unblock the Notifications