தமிழகத்திலும் தனி ஈழ வாக்கெடுப்பு- வைகோ

தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் 7வது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்,
எந்தவொரு விடுதலைக்கான போரும் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஈழப் போரில் தற்போது ஏற்பட்டுள்ளது சிறு பின்னடைவு தான்.
இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமையை போல வேறு எந்த இனத்தவருக்கும் நேர்ந்ததில்லை. இந்தத் தமிழினப்
படுகொலைக்கு இந்திய அரசு துணை நின்றது. திமுக அரசு வேடிக்கை பார்த்தது.
சுதந்திர இறையாண்மை உள்ள, மதச்சார்ப்பற்ற தனி ஈழ தேசம் அமைய வேண்டும் என்று 1976ம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் செல்வா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு நார்வே, கனடா நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் தற்போது வாக்கெடுப்பு நடத்தி பெருத்த ஆதரவு அளித்தனர். இந்த வாக்கெடுப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இலங்கையிடம் ஐ.நா. சபை வலியுறுத்த வேண்டும்.
கனடா, நார்வே போல ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழகத்திலும் இதுபோல வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள், மானபங்கம், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றை தமிழக மக்களிடம் பிரசாரம் செய்து, தமிழீழ விடுதலைக்கு ஆதரவு திரட்ட வேண்டும்.
புது எழுச்சியோடு பிரபாகரன் மீண்டும் வருவார். முன்னைவிட அதிநுட்பமாக ஈழப் போரை அவர் வழிநடத்துவார்.
நான் பேசிய பேச்சுக்காக ஏழு மாதத்துக்குப் பின் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. யார் துரோகி என சிந்திக்க வேண்டும்?
இலங்கையில் தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இந்திய அரசு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வது.
மத்திய மற்றும் தமிழக அரசை நான் எச்சரிக்கிறேன். சோவியத் சுக்கு நூறானது போல, இந்திய வரைபடம் கிழித்தெறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கிறேன். நம் வாழ்நாளிலேயே சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications