ஹைதராபாத்தில் கூடுதல் துணை ராணுவம் குவிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் அறிவிக்காத நிலையில், தெலுங்கானா போராட்டக் குழுவினர் திட்டமிட்டபடி நாளை முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த தயாராகி வருகின்றனர்.
ஆர்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதால் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து டிசம்பர் 30ம் தேதிக்குள் மத்திய அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை என்றால், ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் காலவரையற்ற பந்த் போராட்டங்கள் துவக்கப்படும் என தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
எனினும் இவ்விஷயத்தில் மத்திய அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 'விரைவில் நல்ல அறிவிப்பு வரும்' என்ற பொதுப்படையான வார்த்தைகளையே மத்திய அமைச்சர்கள் உதிர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே நிர்பந்தத்தால் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு மீண்டும் அதே தவறு நடக்காமல் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்கு வந்திருந்த தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்களிடமும் பிரனாப் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இதே ரீதியில் தான் பேசியுள்ளனர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி தங்கள் போராட்டங்களை நாளை முதல் தீவிரப்படுத்த டி.ஆர்.எஸ் உள்ளிட்ட தெலுங்கானா கட்சிகள் தயாராகி வருகின்றன.
தெலுங்கானா பகுதியில் உள்ள சர்வகட்சிகளும் சேர்ந்து அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழு நடத்தும் பந்த் என்பதால் இதற்கு ஆதரவு முழு அளவில் இருக்கும் என்றும், இதனால் பாதிப்பும் பெருமளவு ஏற்படு்ம எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
10 மாவட்டங்களில் கடைகள் அடைப்பு, போக்குவரத்து முடக்கம், பள்ளி கல்லூரிகள் விடுமுறை போன்ற இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, மாணவர் பேரணிகள் மூலமாக வன்முறையும் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால், ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா மாவட்டங்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படை பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹைதராபாத் நகரில் மட்டும் 112 கம்பெனிகள் போலீசார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக 144 சட்டப்பிரிவு தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் பிரசாதராவ் தெரிவித்தார்.
எந்தவிதமான பேரணி நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து பேரணியாக யார் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், தெலுங்கானா கூட்டு நடவடிக்கை மாணவர் குழுவினர் ஒன்பது மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்களை திரட்டி ஹைதராபாத்தை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள், மருந்து கம்பெனிகள், ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேபினட் கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்:
இதற்கிடையே, தெலுங்கானா விவகாரத்துக்காக பதவியை ராஜினாமா செய்த மாநில அமைச்சர்கள் மத்திய அரசு முடிவை அறிவிக்கும் வரை மாநில கேபினட் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என கூறியுள்ளனர்.
தகவல் தொழி்ல்நுட்பத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி, பொதுவினியோக அமைச்சர் கிருஷ்ணா ராவ், நீர்பாசன அமைச்சர் லக்ஷமய்யா உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்று மூத்த காங்கிரஸ் அமைச்சர்களை சந்தித்து பேசினர்.
பொதுவான ராஜினாமா கடிதங்களை சோனியாவுக்கு அனுப்பியுள்ள இவர்கள் மத்திய நிதியமைச்சர் பிரனாப், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மூத்த தலைவர் அஹமதுபட்டேல் உள்ளிட்டோரை சந்தித்து தெலுங்கானா நிலவரத்தை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications