தொழுகை நடத்த முஸ்லீம் அமைப்பு திட்டம்- வேலூர் கோட்டை மசூதிக்குப் பாதுகாப்பு
வேலூர்: வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதிக்குள் நுழைந்து தொழுகை நடத்த பெரம்பலூரைச் சேர்ந்த முஸ்லீம் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து கோட்டைக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது வேலூர் கோட்டை. இந்தக் கோட்டைக்குள் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதி தற்போது தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் பொறுப்பில் உள்ளது.
இந்த மசூதியில் தற்போது தொழுகை உள்ளிட்டவை நடத்த அனுமதி இல்லை. மிகவும் பழமையான மசூதி என்பதால் இதைப் பாதுகாக்கும் பொருட்டு அங்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மசூதியைத் திறந்து அங்கு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமுமுக உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கோரி வருகின்றன.
ஆனால் இந்த மசூதியில் பல காலமாகவே தொழுகை எதையும் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் 1921ம் ஆண்டு இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவிடமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே இங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று தொல் பொருள் ஆய்வுக் கழகம் கூறி வருகிறது.
இதையடுத்து டிசம்பர் 31ம் தேதிக்குள் மசூதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமுமுக உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் அமைப்பினர் திடீரென மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்தப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோட்டைக்கும், மசூதிக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications