மலேசிய முருகன் கோவிலில் தமிழக அமைச்சர்
சென்னை: மலேசியாவின் புகழ் பெற்ற பத்து குகை முருகன் கோவிலுக்கு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சுற்றுப்பயணம் செய்து அங்கு அமல்படுத்தப்படும் நடைமுறைகள், பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதலமைச்சர் உத்திரவின் பேரில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர் க.முத்துசாமி, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.ரா.சம்பத், ஆகியோருடன் மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை அருள்மிகு முருகன் திருக்கோயிலுக்கு அலுவல் முறையாக கடந்த 21.12.2009 அன்று நேரில் பார்வையிட சென்றார்.
பத்துமலை அருள்மிகு முருகன் கோயிலில், அமைச்சர் அவர்களுக்கும், அரசு செயலர் மற்றும் ஆணையருக்கும், இத்திருக்கோயிலின் நிர்வாகக்குழுவைச் சார்ந்த 64 உறுப்பினர்களும் வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் அவர்களும் அரசு அலுவலர்களும் அத்திருக்கோயிலில் நடைபெறும் நிர்வாக நடைமுறைகள், அங்கு நடைபெறும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.
இத்திருக்கோயில் நிர்வாகக் குழுவினர், திருக்கோயில் நிர்வாக நடைமுறைகள் மற்றும் இதர பணிகள் குறித்து அமைச்சர் அவர்களுக்கு விரிவாக தெரிவித்தனர்.
அமைச்சர் பெரியகருப்பனும், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள், திருப்பணிகள், திருக்கோயில்களில் நிறைவேற்றப்பட்டு வரும் நலத்திட்டங்கள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றை அத்திருக்கோயில் நிர்வாக குழுவினருக்கும், பக்தர்களுக்கும் விரிவாக எடுத்துரைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications