முதல்வராக பதவியேற்றார் சிபுசோரன்

நடந்து முடிந்த ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக என யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.
81 இடங்கள் கொண்ட சட்டசபையில் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கொண்டுள்ள சபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முதலில் காங்கிரஸ் திட்டமிட்டது.
ஆனால், ஆதரவு வேண்டுமானால் முதல்வர் பதவி எனக்குத்தான் என சிபுசோரன் உறுதியாக இருந்ததால், கூட்டணியுடன் சேர்த்து 24 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் இம்முயற்சியில் தோற்றது.
எனினும் பாஜக தனது 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை சிபுசோரனுக்கு அளித்து ஆட்சியிலும் பங்கு கேட்டு ஒப்பந்தம் போட்டுவிட்டது.
இதையடுத்து ஜார்க்கண்ட் அனைத்து மாணவர் யூனியனின் 5 எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஜ.த.வின் 2 எம்.எல்.ஏ.க்கள், ஜே.ஜே.எம்மின் 1 எம்.எல்.ஏ என மொத்தம் 44 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை சிபுசோரன் கவர்னரிடம் வழங்கினார்.
ஆட்சியமைக்க 41 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது என்பதால், சிபுசோரனை சிக்கலின்றி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள கவர்னர் சங்கரநாராயணன் அழைப்பு விடுத்தார்.
இன்று பிற்பகல் 2.30க்கு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள ராஜ்பவன் கூறியிருந்தது. ஆனால், ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து பாதியில் வெளியேறிய சிபுசோரன் இம்முறை ஐந்தாண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தே தீரவேண்டும் என்ற உறுதியில் ஜோதிடர்கள் தீவிரமாக கணித்து தந்த நேரத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இதன்படி, திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே காலை 10.30 மணிக்கெல்லாம் சிபுசோரன் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். கவர்னர் சங்கரநாராயணன் மூவருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
சோரனுடன் பா.ஜ.க ஜார்க்கண்ட் பிரிவுத் தலைவர் ரகுபர் தாஸ் மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் தலைவர் சுதேஷ் மகதோ ஆகியோரும் பதவியேற்றனர்.
இவர்கள் இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. அவையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் அடுத்தகட்டமாக அமைச்சரவை விரிவாக்கப்படும் என தெரிகிறது.
கர்நாடகா சபாநாயகராக போப்பய்யா தேர்வு:
இந் நிலையி்ல் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க வேட்பாளரான கே.ஜி.போபய்யா கர்நாடக சட்டசபை சபாநாயகராக பலத்த கூச்சல், குழப்பத்துக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதவியேற்ற உடனடியாக போபய்யா அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சபாநாயகராக இருந்த ஷெட்டார் அமைச்சரானதால் இந்தத் தேர்தல் நடந்தது.
அவையை நாளைவரை நடத்த முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் விஷ்ணுவர்தன் மறைவையொட்டி அவை முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications