For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி அறிவிப்பு குறித்து சோனியா எழுதிய கடிதம் காலத்தால் அழிக்க முடியாத செப்போடு - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதம் காலத்தால் அழியாத செப்பேடாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆட்சியிலே இருந்தாலும், எதிர்க்கட்சியாகச் செயல்பட்டாலும் தி.மு.க. தான் ஏற்றுக் கொண்ட லட்சியங்களுக்காக என்றென்றும் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பதற்கு கழக வரலாற்றில் எண்ணற்ற சான்றாவணங்கள் இருக்கின்றன. தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டு மென்பது கழகத்தின் இலட்சியம். அந்த இலட்சியத்தை நிறைவேற்றிட, ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சியாக இருந்த போதும் கழகம் தொய்வில்லாத நடவடிக்கை களை மேற்கொண்டது.

தி.மு.க. தலைவர் என்கிற முறையில் நான், பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டிய அவசியம் குறித்து, 22.4.2003 அன்று ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில்;

"தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்பது எனது இதயபூர்வமான கோரிக்கை. கடந்த பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் இந்தக் கோரிக்கையை மீண்டும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். தமிழ்மொழி எப்போது தோன்றியது என்பதை இதுவரை எந்த அறிஞரும் கண்டு பிடிக்கவில்லை. கல்தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்மொழி என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். இதுவே தமிழின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறேன்.

நான், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகப் பலமுறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்நிலையில், தங்கள் தலைமையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நீண்ட எதிர்பார்ப்புடன் கூடிய இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்'' என்று மீண்டும் மத்திய அரசுக்கு நினைவூட்டி, வலியுறுத்தினேன்.

2003ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 20, 21 ஆகிய நாட்களில் நடைபெற்ற விழுப்புரம் மாவட்டத் தி.மு.க. மாநாடு; விழிப்புணர்ச்சி ஊட்டிய மாநாடாக - எழுச்சியும், ஏற்றமும் மிகுந்த மாநாடாக - பயன்விளைத்திடும் வகையில் பாங்குற நடைபெற்றது.

அந்த மாநாட்டில் "செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கும், மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக இடம் பெறுவதற்கும் அனைத்துத் தகுதிகளும் தமிழ்மொழிக்கு இருந்தும்; பலமுறை மத்திய அரசிடமும், நாடாளுமன்றத்திலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டும்; இதுவரை அதனை ஏற்று அறிவிக்காமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக் காட்டுவதுடன்; உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி'' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தையொட்டி, தி.மு.க. தலைமை இலக்கிய அணி சார்பாக, தமிழகம் முழுவதும் 15 மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்ச் செம்மொழி - ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. முனைவர் மு.பி.மணிவேந்தன் மற்றும் மாநில நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினர்.

விழுப்புரம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட; தமிழ் ஆட்சிமொழி - செம்மொழி, காவேரி ஆணையம், சேதுசமுத்திரத் திட்டம், பொடா- எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் ஆகியவை குறித்த தீர்மான விளக்கக் கூட்டங்கள் தமிழகமெங்கும் நடைபெற்று, கழகச் சொற்பொழிவாளர்கள் உரையாற்றினர். அந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி, தி.மு.க. 1.11.2003 அன்று மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் அறப்போராட்டத்தை நடத்தியது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால், 10.1.2004 அன்று தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், செம்மொழிக் கோரிக்கையினைத் தமிழறிஞர்கள் மட்டுமன்றிப் பாமரர்களும் அறியவேண்டு மென்றும்; அவர்களும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு நல்கிட வேண்டுமென்றும்; எனவே ஒருகோடிக் கையெழுத்து இயக்கத்தினை நடத்தி, நடுவண் அரசை வலியுறுத்தவேண்டு மென்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடக்க விழா 12.1.2004 திங்களன்று கரந்தைத் தமிழ்ச் சங்கப் பெருமன்றத்தில், தஞ்சை நகர்மன்றத் தலைவர் கு.சுல்தான் முதல் கையெழுத்திட நடைபெற்றது. சம்பந்தப் பட்ட அனைவரும், தமிழ் ஆர்வலர்களும் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் காரணமாக, மிகக்குறுகிய காலத்திலேயே அந்த இயக்கம் இலக்கினை அடைந்தது.

2004, மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி; தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், முதன் முதலாக செம்மொழிக் கோரிக்கையின் நோக்கத்தை விளக்கி; "இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கென்று துறை ஏற்படுத்திடவும், தமிழ் ஆராய்ச்சிக்கென மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கிடவும், உலகளாவிய பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிப் பணி நடைபெறவும் வாய்ப்பாக, செம்மொழிக்குள்ள அனைத்துத் தகுதிகளும் கொண்ட தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியென அறிவிக்க வேண்டுமென தி.மு.க. மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்'' என்ற வாக்குறுதி இடம் பெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, அதில் தியாகத் திருவிளக்காம் சோனியாகாந்தி தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று; டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றன.

நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பிருந்தே சோனியா காந்தியிடம் நாம் தொடர்ந்து எடுத்துரைத்து வந்ததன் விளைவாக, மத்தியில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு வெளியிடப்பட்ட குறைந்தபட்ச பொதுச்செயல் திட்ட அறிக்கையில் தமிழ்மொழி, செம்மொழியென பிரகடனப்படுத்தப்படும் என்ற செயல் திட்டமும் இடம் பெற்றது. இது செம்மொழி வரலாறு ஒரு சிறப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உலகத்திற்கு உணர்த்தியது.

7.6.2004 அன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், தமிழ் செம்மொழியென பிரகடனப்படுத்தப்படும் என்று செய்த அறிவிப்பு, தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

2004, ஆகஸ்டுத் திங்கள் 21, 22 ஆகிய நாட்களில் சேலம் மாநகரில் நடைபெற்ற தி.மு.க. சிறப்பு மாநாட்டில்; "கடந்த ஒரு நூற்றாண்டாகத் தமிழறிஞர்கள் பலரும், தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியே யென்று தக்க சான்றுகள் தந்து, வலியுறுத்தி வந்தாலும், தமிழ்மொழியின் அந்தச் சிறப்புத் தகுதியை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்பதைக் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோதே, பிரதமர் வாஜ்பாய்க்கு கடித வாயிலாகவும், நேரிலும் பலமுறை வலியுறுத்தி வந்ததுடன், தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அதனை இடம்பெறச் செய்து, தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியதற் கிணங்க, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதனை ஏற்று குடியரசுத் தலைவர் உரையில் அறிவித்திருப்பதை இம்மாநாடு வரவேற்பதுடன், விரைவில் அதற்குரிய அரசாணை வெளியிடவும் கேட்டுக் கொள்கிறது'' என்ற தீர்மானம்; பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் முன்மொழிந்திட, ச.அமுதன் வழிமொழிய, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சோனியா காந்தி வழிகாட்டுதலிலும், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலும் இயங்கி வரும் மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12.10.2004 அன்று, தமிழைச் செம்மொழி யெனப் பிரகடனம் செய்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கை வெளியானதும், நான் எவ்வளவு குதூகலம் கொண்டிருப்பேன் - எனது உள்ளம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியால் துள்ளியிருக்கும் - எனது மனதில் எவ்வளவு பெருமிதம் முளைத்திருக்கும்; என்பதையெல்லாம் உடன்பிறப்பே, என்னை முழுதும் அறிந்த நீ நிச்சயம் உணர்வாய்.

தந்தை பெரியார் அவர்கள் என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டியபோதெல்லாம் - அறிஞர் அண்ணா என்னை அரவணைத்து உச்சிமுகர்ந்து அன்புமழை பொழிந்த போதெல்லாம்; அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடான மகிழ்ச்சி அப்போது என்னுள் குடிகொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் 10.10.2004 அன்று சென்னையில் தமிழ் மொழி அகாதமி நடத்திய பாராட்டு விழாவிலும்; 17.10.2004 அன்று மதுரையில், மதுரை தமிழ்ச் சங்கமும், தமிழார்வம் உடைய 30-க்கும் மேற்பட்ட சங்கங்களும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவிலும்; நான் ஆற்றிய உரைகள் அமைந்திருந்தன என்பதைத் தமிழார்வலர்கள் அனைவரும் அறிவர். அந்த உரைகள் இத்தொடர் கட்டுரைகளுக்கு முழுதும் பொருத்தமானவையெனினும்; அவற்றில் ஒருசில பகுதிகளை மட்டும் பின்வருமாறு வழங்குகிறேன். அவை இதோ:

"தமிழ் மொழி செம்மொழி என அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடுகின்ற வகையில் நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம். அதற்கு ஒரு பாராட்டு விழா என்றும், அந்தப் பாராட்டு விழா எனக்கென்றும் குறிப்பிட்டிருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

திராவிட மொழி ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் என்கின்ற பேரறிஞர், அவரைத் தொடர்ந்து பல ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தமிழ்மொழி செம்மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞரை தொடர்ந்து தமிழ்ச் சங்கங்கள் பல, தமிழ்ப் புலவர்கள் பலர், தமிழ்ப் பேரறிஞர்கள் பலர் - இப்படி நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இந்த ஒரு நிலை நாம் எய்துவதற்காகப் பாடுபட்டிருப்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்களுக்கெல்லாம் நீங்கள் தெரிவிக்க வேண்டிய பாராட்டுக்களை, வழங்க வேண்டிய நன்றியை என் வாயிலாக இன்றைக்கு வழங்கியிருக்கின்றீர்கள் என்று தான் நான் கருதுகிறேனேயல்லாமல், நீங்கள் நன்றியினை ஒரு மூட்டையாகக் கட்டி, என்னுடைய தலையிலே வைத்து, இதைக் கொண்டு போய் அவர்களிடத்திலே சேர்த்திடு என்று கட்டளையிட்டிருக்கிறீர்கள்.

நான் ஒரு கருவி. இந்தக் கருவியைத் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் பேரறிஞர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உளி சிற்பம் செதுக்குவதற்காகப் பயன்படுத்தப் பட்டால், அந்த உளியே அந்தச் சிற்பத்தை செதுக்கியதாக பொருள் கொள்ள முடியுமா? அந்தப் பணியை ஆற்றியது சிற்பி. அதைப்போல நான் உளிதான், சிற்பிகள் பலர், பல்லாயிரவர். அந்தச் சிற்பிகளுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை, நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் கொஞ்சம் அணுகிப் பார்த்தால் எந்தவொரு மொழியும் ஒரு அரசைப் பொறுத்துத் தான் வளர முடியும். வரலாற்றை நீங்கள் புரட்டிப் பார்ப்பீர்களேயானால், ஒரு மொழி வளர அரசும், அரசின் ஆதிக்கமும் அந்த அரசை நடத்துகின்றவர்களுடைய ஆதரவும் தேவை என்பதை அறியலாம். அப்படிப் பார்த்தால் தமிழ் செம்மொழியாக ஆவதற்கான வழிவகை வகுக்கின்ற ஒரு அரசு இந்தியாவிலே உருவாயிற்று என்பதே உண்மை. அந்த அரசின் கடமையாகத்தான் தமிழ் செம்மொழியாக இன்றைக்கு ஆக்கப்பட் டிருக்கின்றது.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றிய டாக்டர் மன்மோகன் சிங் வழிகாட்டும் குழுவிற்கு பொறுப்பேற்றிருக்கின்ற சோனியா காந்தி அம்மையாருக்கும் இந்தப் பெருவிழாவின் சார்பாக நான் நன்றியினைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் 1924ஆம் ஆண்டு 80 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில், தஞ்சைத் தரணியில் எங்கோ ஒரு சிற்றூரில், திருக்குவளை என்ற கிராமத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த நான் இன்றைக்கு, இந்தப் பெருவிழாவில், தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் வாழ்த்த, இத்தனை போற்றுதலுக்கும், புகழுதலுக்கும், பெருமைக்கும் உரியவனாக ஆகியிருக்கிறேன் என்றால், இதற்குக் காரணமாக என்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையாருக்கும், என்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்களுக்கும், வழிகாட்டி உய்வித்த அண்ணன் பேரறிஞர் அண்ணாவுக்கும் என்னோடு ஒத்துழைத்து, உறுதுணையாக இருக்கின்ற உங்கள் அனைவருக்கும், எல்லா உடன்பிறப்புகளுக்கும் இந்த நன்றியைக் காணிக்கையாக ஆக்குகின்றேன்.

கடந்த காலத்தில் தமிழ் செம்மொழியாக ஆவதற்காகவும், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆவதற்காகவும், விழுப்புரம் மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றி போராட வேண்டியிருந்தது. ஒரு லட்சம் பேர் என்னுடைய தலைமையிலே உள்ள இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுதும் கவனிக்கப்படும், பார்ப்போம் என்ற ஒரு ஆறுதல் மொழிகூட கடந்த காலத்திலே இருந்த அரசிடமிருந்து நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இந்த அரசு, இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற அரசு, நம்முடைய உணர்வைப் புரிந்து கொண்டு, உடனடியாக செம்மொழியாக ஆக்குவோம் என்று குடியரசுத் தலைவர் உரையிலே அறிவித்து, அறிவித்ததை நீங்கள் எப்போது அமலாக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் வலியுறுத்தி, வலியுறுத்தி, இன்றைக்கு அது ஆக்கபூர்வமாக, அமைச்சரவைக் கூட்டத்திலேயே அங்கீகாரம் பெற்று, தமிழ் மொழி, செம்மொழியாக நம்முடைய மடிகளிலே தவழ்ந்து விளையாடுகின்ற ஒரு காட்சியைக் காணு கின்றோம்.

இது ஒருவருடைய உழைப்பு அல்ல. தமிழ்நாட்டிலே இருக்கின்ற வாக்காளப் பெருமக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போக வில்லை. நாங்கள் தமிழ் மீது வைத்துள்ள ஆசை, பாசம் இவைகள் எல்லாம் வீண் போகவில்லை. வீண் போகாமல் பாதுகாத்த பெருமை எனக்கல்ல. என்னுடைய தலைமையிலே நாற்பது பேரை வெற்றிபெறச் செய்த இந்த நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு உரியது. தமிழர்களுக்கு உரியது. எனவே, இந்தப் பாராட்டும், நன்றி கூறும் விழாவும், அவர்களுக்கே உரியது''.

பின்னர், 5.3.2006 அன்று திருச்சியிலே நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் சோனியாகாந்தி முன்னிலையில் நான் உரையாற்றிய போதுதான் என்னுள் பெருக் கெடுத்த உணர்வுகள் குற்றாலத்து அருவி யெனக் கொட்டின. அந்த உணர்வுகளை இதனை எழுதும்போது மீண்டும் நான் பெற்று, படிக்கும்போது நீயும் பெறவேண்டும் என்பதற்காக, உரையின் ஒரு பகுதியை பின்வருமாறு வழங்கியிருக்கிறேன்:

"தமிழைச் செம்மொழியாக்க; நூற்றைம்பது ஆண்டுகாலமாக சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞருடைய கோரிக்கை பூத்து, காய்த்து, பழுத்து, அது அழுகிவிடுமோ என்றெல்லாம் நாம் பயந்திருந்த காலத்தில்; "நாங்கள் இருக்கிறோம், அஞ்சாதீர்கள்'' என்று சொல்லுகின்ற இன்றைய மத்திய ஆட்சி நாம் விடுத்த அந்த வேண்டுகோளை ஏற்று தமிழை செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. தமிழ் செம்மொழி என்று அறிவித்து; அதைத் தொடர்ந்து அம்மையார் அவர்களே, நவம்பர் 8 அன்று நீங்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதினீர்கள். அந்தக் கடிதத்தில்,

அதாவது, தமிழை செம்மொழியாக ஆக்குவதற்குத் தேவையான சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறி விட்டது. இந்தச் சாதனைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் காரணம் என்றாலும்கூட, குறிப்பாகவும் சிறப்பாகவும், நீதான் இதற்குக் காரணம். உன் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதற்குக் காரணம் என்று எழுதினீர்கள்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது ஒரு கடிதமாக அல்ல. காலா காலத்திற்கும், இன்னும் நூறாண்டுகாலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு என் கொள்ளுப் பேரன் எடுத்துப் படித்து நம்முடைய தாத்தா கட்டிக்காத்த செப்பேடு இது என்று பாராட்டுகின்ற அளவிற்கு ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான்.

இளமைப் பருவத்தில் தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து அரசியல் வாழ்வைத் தொடங்கியவன் நான். அந்த அரசியல் வாழ்வுதான் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் செம்மொழியாக ஆக, ஒரு வரலாறு உண்டு என்றால், அந்த வரலாற்றை - பெருமையை எனக்கு அளிக்கும் வகையில் நீங்கள் எனக்கு எழுதிய அந்தக் கடிதம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, வைரங்கள் பதிக்கப்பட்டு, என்னுடைய கல்லறையிலே எதிர்காலத்தில் மாட்டப்பட வேண்டிய ஒன்று. என்னுடைய நினைவகத்திலே இருக்க வேண்டிய ஒன்று என்கின்ற அந்த பூரிப்போடு நீங்கள் எழுதிய அந்தக் கடிதத்திற்காக என்னுடைய நன்றி யையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்''.

இந்த நன்றி உரையின் ஒவ்வொரு சொல்லும் நான் வாழும் காலம் வரை எனது இதயத்திலும்; ஏன், நான் மறைந்த பிறகும்கூட, எனது கல்லறையிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்!

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமென்று, தமிழறிஞர்கள் முதலில் எழுப்பிய குரல் - அமைப்பு ரீதியாக எதிரொலித்து - தமிழர்களின் இதயக் குரலாக மாறி - அரசியல் அரங்கில் ஏற்றம் பெற்று - ஆட்சி மூலமாக அந்தக் குரல் ஆற்றல் பெற்று - தக்கோரிடத்தில் சரியான தருணத்தில் தகுதி படைத்தோரால் உரிய முறையில் எடுத்துரைக் கப்பட்டதால்; தமிழ் அன்னை இன்றைக்குத் தங்கரதத்திலே வீற்றபடி தரணியிலே பவனி வருகிறாள்!

காலம் கனிந்தது. தமிழர்களின் நூறாண்டு காலக் கனவு நனவானது. தமிழ் செம்மொழி யெனப் பிரகடனம் ஆயிற்று - செம்மொழி வரலாற்றின் முதல் பாகம் சிறப்பாக நிறைவெய்தி உள்ளது. செம்மொழிக்கு நாம் அடுத்தடுத்து ஆற்றிட வேண்டிய பணிகள் அணிஅணியாக உள்ளன. அவற்றிற்காக நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வோமாக!

செம்மொழியாம் தமிழ் வாழ்க! செந்தமிழர் நலம் வாழ்க! சீர்மிகு தமிழகம் செழித்தோங்கி வளர்ந்திடுக என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X