For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்தியில் தமிழ் ஆட்சிமொழியே குறிக்கோள்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் மூலமாக இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெறும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கலந்தாய்வு கூட்டம் சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.

தாஜ் கோரமாண்டல் ஹோட்டலில் நடந்த இக் கூட்டத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள 21 குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாஜக தலைவர் இல.கணேசன், அஇசமக தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வை.சிவபுண்ணியம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சபாநாயகர் ஆவுடையப்பன்,

கனிமொழி எம்.பி, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பா.விஜய், தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, கல்வியாளர் வி.சி.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், பட தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், அபிராமி ராமநாதன், உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,

தமிழர் பண்பாடு என்ற ஒரே நிலையில் ஒன்று சேர்ந்த ஆன்றோர்களும், சான்றோர்களும் இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக அமைய ஆக்கப்பூர்வமான யோசனைகளை தந்துள்ளார்கள்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற மாநாட்டின் முழக்கத்தை உலகம் முழுவதும் பரப்புவது மட்டுமின்றி அதற்கு ஏற்ற நடைமுறைகளை நிறைவேற்றுவதிலும் இந்த மாநாடு முக்கிய அக்கறை செலுத்த வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது என்றார்.

கேள்வி: செம்மொழி மாநாடு வரும் ஜூன் மாதம் தான் நடக்கப் போகிறது. ஆனால், இப்போதே மாநாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளீர்களே?

கருணாநிதி: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஒருவருக்கு திருமணம் என்றால் முன்னதாகவே நிச்சயதார்த்தம் செய்து, அதற்குரிய சடங்குகளையும் ஏற்பாடுகளையும் செய்வது வழக்கம்.

கேள்வி: தமிழ்மொழி வளர்ச்சிக்கு இந்த மாநாடு மைல் கல்லாக அமையுமா?

கருணாநிதி: நடக்கப் போகும் மாநாடு, கூடி கலையும் மாநாடாக அல்ல. இந்த மாநாட்டின் வெற்றி மூலம், இந்த மாநாட்டுக்குப் பிறகு இந்தியப் பேரரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெறும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கேள்வி: மாநாட்டுக்கு எதிர்க்கட்சியினரை அழைப்பீர்களா?

கருணாநிதி: எல்லாரையும் அழைத்தோம். ஆனால் எதிர்க்கட்சி, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வரமுடியாது என்று பதில் அளித்து விட்டார்கள்.

கேள்வி: மாநாட்டுக்கு தேசிய தலைவர்களை அழைப்பீர்களா?

கருணாநிதி: பிரதமரை அழைத்துள்ளோம். சோனியா காந்தி அம்மையாரையும் அழைத்துள்ளோம். அவர்கள் இருவரும் புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள். மாநாட்டுக்கு ஜனாதிபதியை அழைத்துள்ளோம். அவர் நிச்சயம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X