புத்தாண்டு: தாறுமாறாக வாகனங்கள் ஓட்டி 4 பேர் பலி
சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வேகமாகவும், தாறாமாறாகவும் ஓடிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி 4 பேர் இறந்தனர். புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 125 பேர் காயமடைந்தனர்.
புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி மாலைக்கு மேல் சென்னை நகரில் வாகனங்களை ஓட்டிச் சென்ற பலரும் டபுள் மனிதர்களாக மாறி விட்டனர். பெரும்பாலானவர்கள் குடி போதையிலும், பலர் உற்சாக மிகுதியிலும், நண்பர்கள் புடை சூழ வாகனங்களை ஓட்டியதாலும் வழக்கமான வேகத்தை விட அதி வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
அதிலும் கடற்கரைச் சாலைகளில் போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி வாகனங்கள் தாறுமாறாக பறந்தன.
இப்படி உற்சாகம் என்ற பெயரில் படு வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் உயிரை இழந்தனர். இவர்களால் 125 பேர் காயமடைந்தனர்.
பழைய மகாபலிபுரம் சாலையில்,படு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி இறந்தனர். நின்று கொண்டிருந்த லாரி மீது அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் ஒரு இளைஞர் படுகாயத்தோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பத்குமார் (28) என்ற தனியார் டி.வி. நிறுவன ஊழியர் பரிதாபமாக விபத்தில் சிக்கி இறந்தார். சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் ரோட்டில் சென்றபோது சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்து உயிரைவிட்டார்.
விருகம்பாக்கத்திலும் வாகன விபத்தில் ஒருவர் இறந்ததாக தெரிய வந்துள்ளது. கோட்டூர்புரத்தில் குடிபோதையில் சதீஷ் என்ற இளைஞர் மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
நேற்று அதிகாலையில் கல்யாணி என்ற இளம்பெண் கோடம்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். நடன வகுப்புக்கு சென்ற அவரை கோடம்பாக்கம் ரயில்வே பாலம் அருகில் காரில் கும்மாளம் போட்டு வந்த 4 இளைஞர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர்.
உடனே கல்யாணி செல்போனில் பேசி தனது உறவினர்களையும், நண்பர்களையும் உதவிக்கு அழைத்தார். உடனே ஏராளமானோர் இன்னொரு காரில் திரண்டு வந்தனர். கல்யாணியை கிண்டல் செய்த வாலிபர்களோடு அவர்கள் மோதினர்.
இதில் கிண்டல் செய்த கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கியதில் கல்யாணிக்கு ஆதரவாக வந்த குரூப்பில் இருந்த சட்டக் கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் வருவதைப் பார்த்ததும் இரண்டு கும்பலும் தப்பி தலைமறைவாகி விட்டது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தாறுமாறாக வாகனம் ஓட்டியதால் ஏராளமான சிறு, சிறு விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த விபத்துக்களில் சிக்கி 125 பேர் காயம் அடைந்தனர்.
ரகளை: கார், ஆட்டோக்கள் உடைப்பு
இந் நிலையில் சென்னையில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின்போது பட்டினபாக்கம் 7வது டிரஸ்ட் குறுக்கு தெருவில் சில வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் இருந்த அந்தக் கும்பல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள், 2 ஆட்டோக்கள், 4 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடிவிட்டது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications