நரேஷ்குப்தா அதிமுககாரரா?-அழகிரி கேள்வி
மதுரை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு பென்னாகரம் இடைத் தேர்தலை தள்ளி வைக்கிறார். இதைப் பார்க்கும்போது அவர் அதிமுகவைச் சேர்ந்தவரோ என்ற சந்தேகம் வருகிறது என்று கூறியுள்ளார் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
2011ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை எம்பி தேர்தலை போல் 100க்கு 100 சதவீதம் அல்லது 95 சதவீதம் திமுக கூட்டணி தான் வெல்லும்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன். அதற்காகத்தான் அவர்கள் தற்போது தேர்தலையே தள்ளி வைக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
பொதுவாக இடைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன், தேர்தல் ஆணையம் அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரிடமும், உள்துறைச் செயலாளரிடமும் ஆலோசனை நடத்தித் தான் அறிவிப்பார்கள். ஆனால் அது போல் எதுவும் செய்யாமல் தேர்தல் ஆணையம் பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது.
இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு திமுகவும், காங்கிரசும் தேர்தல் பணிகளைத் தொடங்கின.
ஆனால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக வற்புறுத்தியது. முக்கிய கட்சிகளான திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது என்று தெரிவித்தன.
ஆனால் அதையும் மீறி, அதிமுகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் கமிஷன் தேர்தலை தள்ளி வைத்துள்ளது. இதைப் பார்க்கும் போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அதிமுக உறுப்பினராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டன் சரியில்லை என்று கூறி இடைத் தேர்தல்களை ஜெயலலிதா முதலில் புறக்கணித்தார். அப்படியென்றால், அவர் மின்னணு எந்திரத்தில் பட்டனை சரி செய்து விட்டு அல்லவா, திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்.
தற்போது அங்கும் தோற்று விட்டு, திமுக பெற்றது இயற்கையான வெற்றி அல்ல என புலம்பிக் கொண்டிருக்கிறார். இது அவருடைய வழக்கமான புலம்பல் தான். ஜெயலலிதா இனி ஆட்சிக்கே வரமாட்டார்.
இடைத் தேர்தல்களின் முடிவு எதிரொலியாக, அதிமுக தலைவர்கள் பலர் திமுகவுக்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
தேமுதிகவை பொருத்தவரை நான் ஏற்கனவே கூறியிருந்தேன், அது 'தேய்ந்த-தேறாத' கட்சி என்று. அந்த கட்சியின் பெயரே வாயில் நுழைய மறுக்கிறது.
முதல்வர் கருணாநிதி நினைத்ததை முடிக்காமல் விட மாட்டார். கடந்த 1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. தற்போது கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையும், சிறப்பாக நடத்திக் காட்டுவார்.
மேலூர் அருகே டிராக்டர் தொழிற்சாலை, கிரானைட் கல் பாலிஷ் போடும் தொழிற்சாலை ஆகியவை 2011 க்குள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாட்டுத்தாவணி அருகே தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் தற்காலிக மார்க்கெட் திறக்கப்படும்.
டெல்லியை போல மதுரையிலும் நவீன இலவச கழிப்பறைகள் 18 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 10 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
செல்லூர் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் அழகுப்படுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையை தொடங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அழகிரி.
அழகிரி பெயரில் பேரவை:
இந் நிலையில் அகில இந்திய மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் ஒரு பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தர்மலிங்கம் என்பவர்தான் இந்தப் பேரவையின் தலைவர். அவர் கூறுகையில், இது ஒரு பதிவு பெற்ற அமைப்பாகும். தமிழ்நாட்டில் நாங்கள் திமுகவின் கீழ் செயல்படுவோம். பிற மாநிலங்களில் இதை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவுள்ளோம் என்றார்.
பிரதமர் பதவியில் அழகிரியை அமர வைப்போம் என்றும், மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர வைப்போம் என்றும் கூறுகிறது இந்த பேரவை.
இந்தப் பேரவையின் செயல்பாட்டை திமுக தலைமை அனுமதிக்காது என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு தயாநிதி மாறன் பேரவை என்ற பெயரில் சிலர் கிளம்பினர். இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கடும் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டது நினைவுகூறத்தக்கது.
மீரா குமாரை சந்திக்காத அழகிரி:
இதற்கிடையே மக்களவையில் அமைச்சர்கள் தமிழில் பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அழகிரி, இது தொடர்பாக தன்னை சந்திக்குமாறு சபாநாயகர் மீரா குமார் அழைப்பு விடுத்தும் அவரை இதுவரை சந்திக்கவில்லை என்று தெரிகிறது.
மீரா குமார் அழைப்பு விடுத்து 1 மாதத்துக்கு மேல் ஆகியும் அவரை அழகிரி சந்திக்கவில்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications