சுய பெருமைக்காக செம்மொழி மாநாடு-வைகோ

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கும், முல்லைப் பெரியாறு உள்ளிட்டவற்றில் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இப்படிப்பட்டவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்துகிறார்.
சுய பெருமைக்காகவும், தமிழ் மக்ளுக்கு தான் இழைத்த துரோகத்தை மறக்கடிக்கும் வகையிலும்தான் இந்த மாநாட்டை அவர் நடத்துகிறார். விலைவாசி உயர்வு, இடைத் தேர்தல்களில் நடைபெறும் ஜனநாயகப் படுகொலைகள் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையிலேயே இந்த மாநாட்டை அவர் நடத்துகிறார்.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் மிகப் பெரும் இனப்படுகொலையை இலங்கை அரசு செய்ய இந்திய அரசைத் தூண்டி விட்டு ஆயுத உதவிகளையெல்லாம் வழங்க வைத்து அனைத்து வகையான உதவிகளையும் செய்து விட்டு, இப்போது அனைத்துக் கட்சிகளும் செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என கோருகிறார் கருணாநிதி.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை உடனே நிறுத்துக என்று கூறி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் என்னவாயிற்று. அந்தத் தீர்மானத்தை மதித்து ஒரு பெயருக்குக் கூட போரை நிறுத்துமாறு, இந்திய அரசு கேட்டுக் கொள்ளவில்லையே
இலங்கைத் தமிழர்களின் துயருக்கெல்லாம் காரணமான இந்திய அரசைக் கண்டிக்காமல், அந்த பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில், மாநாடு நடத்தக் கிளம்பியுள்ளார் கருணாநிதி.
தமிழ் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கருதினால் அது முட்டாள்களின் உலகத்தில் இரு்பபதாகத்தான் அர்த்தம். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப் போரில் உயிரை நீத்துள்ளனர். அப்படிப்பட்ட இனத்தவர், எப்படி கொலையாளிகளுடன் கூட்டாக வாழ்க்கை நடத்த முடியும்?
நார்வேயில் நடந்தது போல பிரான்ஸில் நடந்தது போல, கனடாவில் நடந்தது போல தமிழகத்திலும், தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடைபெறும். இப்போது இல்லாவிட்டாலும் உகந்த காலத்தில் அது நிச்சயம் நடைபெறும். அப்போது உலகிலேயே தமிழ் ஈழத்திற்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications