வறுமை-தொடரும் அகதிகள் வருகை!
ராமேஸ்வரம்: ஈழத்தில் இப்போது வறுமைதான் பிரதானமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் என்று தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் கூறியுள்ளனர்.
போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம், இனி வடக்கில் வசந்தம் என்று ராஜபக்சே அரசு கூறியது. ஆனால் தமிழர்கள் தொடர்ந்து அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து வருவது நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கும் பிற நாடுகளுக்கும் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழர்கள் கூட்டமாக கூட்டமாக இடம் பெயர்ந்தவண்ணம் உள்ளனர். அதேபோல தமிழகத்திற்கும் அகதிகள் வருகை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவன், ஒரு சிறுமி ஆகிய 5 பேர் முகுந்தராயர் சத்திரம் அரிச்சமுனை கடற்கரைக்கு அகதிகளாக வந்திறங்கினர். தகவல் அறிந்ததும் கடலோர போலீசார் மற்றும் தனிப் பிரிவு போலீசார் அவர்களை தனுஷ்கோடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த ராஜ்குமார் (60), வினிதா (30), அவரது மகன்கள் சவசியான் (11), எமிசன் (5), மகள் நீராவினி (9) என்று தெரியவந்தது. அவர்களது பெயரை பதிவு செய்த போலீசார் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வினிதா செய்தியாளர்களிடம் ஈழ நிலவரம் குறித்துக் கூறுகையில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகிறார்கள். கிளிநொச்சியை சேர்ந்த நானும், எனது குழந்தைகளும் பல்வேறு போராட்டங்களை கடந்து இங்கு வந்துள்ளோன். 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவர் தமிழகம் வந்துவிட்டார்.
இலங்கையில் கடைசியாக நடந்த சண்டையின்போது கிளிநொச்சியில் இருந்து ஒக்கனை பகுதிக்கு நான் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது ராணுவத்தினர் எங்களை பிடித்து அங்குள்ள முகாமில் 2 மாதங்களாக அடைத்து வைத்திருந்தனர். அங்கு எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
பின்னர் எங்களை வவுனியா மாவட்டத்தில் உள்ள இலுப்பை முகாமுக்கு மாற்றினர். 2 மாதத்திற்கு முன்பு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். நேற்று தலைமன்னாரில் இருந்து உறவினர் ராஜ்குமார் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை விற்று படகு கட்டணமாக கொடுத்து இங்கு வந்து சேர்ந்தோம். இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தமிழர்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் 2009 டிசம்பர் 31 வரை நேற்று வந்த 5 பேரையும் சேர்த்து மொத்தம் 24 ஆயிரத்து 300 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இதில் 3,500 பேர் மண்டபம் முகாமிலும் மற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 130 முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications